இந்தியா - ஆஸி., உறவு குறித்து ஜெய்சங்கர் பேச்சு
கேன்பெரா, ஆஸ்திரேலியா சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந் நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீசை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேச்சு நடத்தினார்.நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசை சந்தித்தார். இரு தலைவர்களும் இந்தியா - ஆஸி., இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், 'ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் பிரதமர் அந்தோணி அல்பனீசை சந்தித்தது மகிழ்ச்சி தருகிறது. அவரிடம் பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். 'இந்தியா - -ஆஸ்திரேலியா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவை மேம்படுத்துவது குறித்த அவரின் வழிகாட்டுதல் பாராட்டத்தக்கது' என்று கூறினார்.ஆஸ்திரேலிய பயணத்தை இன்று முடிக்கும் அமைச்சர் ஜெய்சங்கர், ஆசியான் - இந்தியா சிந்தனையாளர்கள் குழுவின் எட்டாவது வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார். அந்நாட்டு தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.