சர்வதேச விண்வெளி மையத்துக்கு சரக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களுடன், ஜப்பான் ஏவிய எச்.டி.வி., - எக்ஸ் 1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. ஆசிய நாடான ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், எச்.டி.வி., - எக்ஸ் 1 வகை விண்கலம் நவீன தொழில்நுட்பத்துடன் 2009ல் உருவாக்கப்பட்டது. இதில் அதிக சரக்குகளை அனுப்ப முடியும். பறக்கும் போது மின்சாரத்தை வழங்கும் திறன் உடையது. இந்த விண்கலம், எச்3 என்ற சக்திவாய்ந்த ராக்கெட் மூலம், ஜப்பானில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 14 நிமிடங்களுக்குப் பின் அது திட்டமிட்ட வட்டப்பாதையை துல்லியமாக அடைந்தது. இது குறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: இந்த விண்கலம் அடுத்த சில நாட்களில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஜப்பான் விண்வெளி வீரர் கிமியா யூயி, இந்த விண்கலத்தை ரோபோ மூலம் விண்வெளி மையத்துடன் இணைக்கவிருக்கிறார். இந்த விண்கலம் அதிகபட்சம் ஆறு மாதங்கள் விண்வெளி மையத்துடன் இணைந்திருக்கும். அதன் பின், அங்கிருந்து கழிவுகளை எடுத்துச் சென்று, மூன்று மாதங்கள் தனியாக தொழில்நுட்ப சோதனைகள் மேற் கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.