உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்க சிறையில் அடைப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்க சிறையில் அடைப்பு

வாஷிங்டன், தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று அயோவா மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத்தின் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்தபடி, பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாகச் செயல்பட்டார். இவரது சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்தபடி பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, முக்கிய பிரமுகர்களை கொல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர்கள் மீது என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதற்கு லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு எதிராக, 'தேடப்படும் குற்றவாளி' என, நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த மாதம் மும்பையின் பாந்த்ராவில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் அன்மோலுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்க போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பின் அவர் அயோவா மாகாணத்தில் உள்ள சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.அவர் இந்தியாவுக்கு எப்போது நாடு கடத்தப்படுவார் என அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் கேட்கப்பட்டதற்கு, அது குறித்து அமெரிக்க உள்துறை மற்றும் எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவுதான் முடிவு செய்யும் என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை