ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண அனைத்து உதவிகளும் செய்ய தயார் புடினுடனான சந்திப்பில் மோடி உறுதி
கஸான், ''ரஷ்யா - உக்ரைன் போரில் அமைதி தீர்வு காண்பதற்கு தேவையான அனைத்து சாத்தியமான ஒத்துழைப்பையும் உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறோம்,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கடந்த ஜூலையில் ரஷ்யாவுக்குச் சென்றபோது, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த பிரதமர் மோடி, அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து உக்ரைனுக்குச் சென்று அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தபோதும், இதை மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதை இரு நாட்டு அதிபர்களும் வரவேற்றனர். பல உலக நாடுகளின் தலைவர்களும், இந்த விஷயத்தில் தீர்வு காண, இந்தியாவால் மட்டுமே உதவ முடியும் என்று கூறினர்.இந்நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, பிரிக்ஸ் அமைப்பின், 16வது கூட்டம், ரஷ்யாவின் கஸான் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்புவது தொடர்பாகவே முக்கியமாக பேசப்பட்டது.சந்திப்புக்குப் பின், பிரதமர் மோடி கூறியதாவது:ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலுவாக உள்ளது. மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இங்கு வந்துள்ளதே இதற்கு அத்தாட்சி. கஸான் நகரில் புதிதாக இந்திய துாதரகம் திறக்கப்பட உள்ளது, இரு தரப்பு உறவின் அடுத்தக்கட்ட நகர்வு. ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, ரஷ்யாவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, பேச்சின் வாயிலாகவே, இரு நாட்டுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.மிக விரைவில் அமைதி மற்றும் ஸ்திரதன்மை ஏற்படுவதற்கு முழு ஆதரவை அளிக்கிறோம். மனிதநேயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கத் தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினாார்.கூட்டத்திற்கு இடையே, பிரதமர் மோடி ஈரான் அதிபர் பெஷ்கியானை சந்தித்து பேசினார்.
கிருஷ்ண பஜனையுடன் வரவேற்பு!
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக கஸான் சென்ற பிரதமர் மோடி, தான் தங்கும் ஹோட்டலுக்கு சென்றபோது, இந்திய வம்சாவளியினர் அதிகளவில் திரண்டு வரவேற்றனர். இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமஸ்கிருத பக்தி பாடல்களுடன், கிருஷ்ண பஜனைகளை பாடி, மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.ரஷ்ய கலைஞர்கள், இந்திய பாரம்பரிய உடையுடன், ரஷ்ய நடனமாடி வரவேற்பு அளித்தனர்.