| ADDED : மார் 29, 2025 03:02 AM
காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடந்ததால், போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். நம் அண்டை நாடான நேபாளம் இமயமலை அடிவாரத்தில் உள்ளது. நமக்கும், நம் அண்டை நாடான சீனாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ள நேபாளத்தின் பிரதமராக ஷர்மா ஒலி உள்ளார். இவர் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இங்கு, முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ல் நடந்த போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி அமலுக்கு வந்தது. இருப்பினும், 17 ஆண்டுகளில் ஒரு பிரதமர் கூட ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது இங்கு கவலைக்குரிய விஷயம். அரசியல் கூட்டணி குழப்பம் உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, 17 ஆண்டுகளில், 13 பிரதமர்களை நேபாளம் கண்டுள்ளது. தற்போதைய பிரதமர் ஷர்மா ஒலியின் ஆட்சியிலும் திருப்தியடையவில்லை. எனவே, அங்கு மீண்டும் மன்னராட்சியை கொண்டு வர வலியுறுத்தி பல்வேறு தரப்பினர், கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் காத்மாண்டு மற்றும் ப்ரிகுடிமாண்டப் பகுதிகளில் நேற்று ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். போலீசாரின் தடுப்புகளை மீறிச் சென்றவர்களை, பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இந்த மோதலில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைநகர் உட்பட நாடு முழுதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்; பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.