உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாள கலவரம்: மன்னராட்சி கோரி போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது

நேபாள கலவரம்: மன்னராட்சி கோரி போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளத்தில் மன்னராட்சி கொண்டு வர வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். பொது சொத்துகளை சேதப்படுத்திய 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஷர்மா ஒலி என்பவர் பிரதமராக உள்ளார்.

வன்முறை

இங்கு, மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ல் நடந்த போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி அமலுக்கு வந்தது.இருப்பினும், 17 ஆண்டு களில் ஒரு பிரதமர் கூட ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை. தற்போதைய பிரதமர் ஷர்மா ஒலியின் ஆட்சியிலும் திருப்தியடையாத மக்கள் அங்கு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாதம் 19ம் தேதி முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, மன்னராட்சி அமல்படுத்த வலியுறுத்தி வீடியோ வெளியிட்டதை அடுத்து, அங்கு அதற்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஞானேந்திர ஷா ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகரின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. அரசியல் கட்சி அலுவலகங்கள், கடைகள் சூறையாடப்பட்டன. முக்கிய கட்டடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.தலைநகர் முழுதும் கட்டுக்கடங்காமல் அரங்கேறிய வன்முறை சம்பவங்களில், ​​14 கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தில் 'டிவி' ஒளிப்பதிவாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்; 110 பேர் காயமடைந்தனர். கலவரங்களை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

ஊரடங்கு

நேற்று முன்தினம் மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீரடைந்ததை அடுத்து உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. கலவரத்தின் போது, பொது சொத்துகளை சேதப்படுத்திய 105 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். வன்முறைக்கு முக்கிய காரணமானவராக கூறப்படும் துர்கா பிரசாய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மன்னரின் சலுகைகள் ரத்து?

வன்முறை போராட்டங்களைத் துாண்டியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அரசு சலுகைகளை ரத்து செய்யவும், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை