உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது தவறான தகவல்; சொல்கிறார் முகமது யூனுஸ்!

வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது தவறான தகவல்; சொல்கிறார் முகமது யூனுஸ்!

டாக்கா: 'வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது தவறான தகவல்'என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.இடைக்கால அரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற, ராணுவ தலைமை தளபதி வக்கார் உஸ் ஜமான் முயற்சித்து வருவதாக, அந்நாட்டு சமூக ஊடகங்களில் சமீபத்தில் தகவல் பரவியது. இது குறித்து, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியதாவது: நாம் ஒரு போர் சூழ்நிலையில் இருக்கிறோம். வங்க தேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு என்பது தவறான தகவல். விழிப்புணர்வு மற்றும் அதிக ஒற்றுமை மூலம் மக்கள் வதந்திகளை எதிர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால், அதன் தேதி இன்னும் முடிவு செய்யப்படாததால், வதந்திகள்பரவி வருகிறது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள், ஏன் அவர்கள் இந்த வதந்திகளை பரப்புகிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தவறான தகவல்களைக் கேட்டாலோ அல்லது சமூக ஊடகங்களில் அதைப் பார்த்தாலோ, அதற்கான ஆதாரங்களை மக்கள் தேட வேண்டும்.நமது ஒட்டுமொத்த ஒற்றுமை அவர்களை கடுமையாக எரிச்சலூட்டுகிறது. அவர்கள் ஒற்றுமையை உடைக்க விரும்புகிறார்கள். வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க தனது நிர்வாகம் ஐ.நா.,வை நாடி உள்ளது. சமீபத்தில் வங்கதேசத்திற்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ