| ADDED : டிச 14, 2024 09:38 PM
இஸ்தான்புல்: இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, துருக்கியில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்புக்கு உள்ளாகினர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததாக கூறியுள்ள இந்தியத் தூதரகம், விமானம் நேற்று கிளம்பிச் சென்றதாக கூறியுள்ளது.துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து, டில்லி மற்றும் மும்பைக்கு இரண்டு விமானங்களை இண்டிகோ விமானம் இயக்கி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர், டில்லி மற்றும் மும்பை வர வேண்டிய விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானங்கள் கிளம்பவில்லை. மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால், 400க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கு தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதில், புற்றுநோயாளிகளும் அடங்குவர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடத் துவங்கினர். இதனையடுத்து இண்டிகோ விமானம் மன்னிப்பு கோரியது.மேலும், அவர்களுக்கு உதவி செய்ததாக துருக்கிக்கான இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயணிகளுடன் தூதரகம் தொடர்பில் இருந்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தோம். உணவு, இருப்பிடம் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதம் ஆனது. தேவையான பரிசோதனைக்கு பிறகு விமானம் கிளம்பிச் சென்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.