காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய வான்வழி தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் மற்றொரு பக்கம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான், பயங்கரவாதிகளை ஆதரித்து வருவதாகவும், ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை இனி சகித்துக்கொள்ள முடியாது எனவும், பொறுமை எல்லை மீறிவிட்டது என்றும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் அந்நாட்டு பார்லிமென்டில் பேசியிருந்தார்.இக்கருத்தை அவர் தெரிவித்த 48 மணி நேரத்திற்குள், ஆப்கானிஸ்தானின் கிழக்கு காபூலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இரு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகளும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நேற்று நடந்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வான்பகுதியில் ஒரு போர் விமானத்தின் சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல் என உறுதி செய்யப்பட்டது. இங்குள்ள ஒரு கட்டடத்தில், டி.டி.பி., அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத் தங்கியுள்ளதாக கிடைத்த உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், அவரை கொல்ல பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.இத்தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் விமானப்படை தெரிவித்தாலும், மெஹ்சுத் தற்போது பாதுகாப்பாக பாகிஸ்தானில் இருப்பதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், மெஹ்சுத்தின் மகன் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சிக்கு வந்தபின், காபூலுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை என்பதால், இதை மிகவும் ஆத்திரமூட்டும் செயலாக தலிபான் கருதுகிறது. மேலும், இதற்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி எட்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பயணத்தின் போது, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் தனித்தனியாக முத்தாகி பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுடனான தலிபானின் நெருக்கம் குறித்து பாகிஸ்தான் அதிருப்தி அடைந்திருக்கலாம் என, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும், சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில், ஆப்கனின் டி.டி.பி., அமைப்பு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுப்பதற்காக இத்தாக்குதலை பா க்., நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான உறவில் மேலும் பிளவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கண்டனம்
அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள, ஆ ப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட இல்லை. ஒரு இன்ச் நிலம் கூட அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. 2021ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், ஆப்கானிஸ்தானில் நிலைமை மாறிவிட்டது. இந்த அணுகுமுறையின் மூலம் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று பாகிஸ்தான் அரசை எச்சரிக்க விரும்புகிறோம். ஆப்கானிஸ் தானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.