| ADDED : நவ 15, 2025 12:38 AM
ஜோஹனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் தரையிறங்கிய தனி விமானத்தில் இருந்த பாலஸ்தீனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கர்ப்பிணி, குழந்தைகள் என, 153 பேர் விமானத்திற்குள்ளேயே, 12 மணி நேரம் சிக்கித் தவித்தனர். தென் ஆப்ரிக்காவின் ஜோஹனஸ்பர்க் நகரில் உள்ள, ஓ.ஆர். தாம்போ சர்வதேச விமான நிலையத்தில், நேற்று முன்தினம் காலை தனி விமானம் வந்திறங்கியது. முதலில் கிழக்கு ஆப்ரிக்காவின் கென்யாவில் உள்ள நைரோபியில் தரையிறங்கிவிட்டு வந்த அந்த விமானத்தில், ஒன்பது மாத கர்ப்பிணி, குழந்தைகள், முதியவர்கள் என, 153 பாலஸ்தீனர்கள் இருந்தனர். அவர்களை, தென் ஆப்ரிக்க குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர்களது ஆவணங்களில் இஸ்ரேல் அதிகாரிகளின் வெளியேறும் முத்திரை இல்லை என்று தடுத்து நிறுத்தப்பட்டனர் . மேலும் எவ்வளவு காலம், எங்கு தங்குவர் என்ற விபரங்களையும் குறிப்பிடவில்லை என அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இஸ்ரேல் - காசா போரின் போது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தென் ஆப்ரிக்கா, பாலஸ்தீனர்களுக்கு அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இ தைத்தொடர்ந்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தலையிட்டதுடன், தொண்டு நிறுவனம் ஒன்றும் அவர்கள் தங்க அனுமதியளித்தது. இதையடுத்து, 153 பேரும் அனுமதிக்கப்பட்டனர். தென் ஆப்ரிக்கா