| ADDED : ஜூலை 29, 2025 04:49 AM
கார்டூம்: சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையினர், தங்களுக்கு என ஒரு தனி அரசை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளனர். வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021-ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக, ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல் பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அங்கு துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான ஆர்.எஸ்.எப்., எனப்படும் அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க படக் அல் பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து துணை ராணுவப் படையினர் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்கினர். சூடானில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் பல ஆயிரம் பேர்கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலைலையில், துணை ராணுவ கிளர்ச்சிப் படையினர், டர்பூர் உட்பட தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு என்று தனி அரசை அமைத்து அறிவித்துள்ளனர். இதற்கு துணை ராணுவப்படையின் தளபதியான முகமது ஹம்தான் டகலோவை தலைவராக நியமித்துள்ளனர். இந்த நடவடிக்கை, சூடானில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தலைநகர் கார்டூமில் உள்ள வெளியுறவு அமைச்சகம், இது ஒரு போலிஅரசாங்கம் என்றும், டகலோ தலைமையிலான நிர்வாகத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.