உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து

தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து

கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பாண்டுக்கான 'ஆசியான்' எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் மலேஷியாவுக்கு வருகை தந்துள்ளனர். உறுப்பு நாடுகளின் தலைவர்களைத் தவிர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் சனா டகாய்ச்சி, பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா, தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் பங்கேற்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்கிறார். கடந்த ஜூலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இல்லாத வகையில், இம்மோதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். இதையடுத்து, இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேஷியா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் இணைந்து மத்தியஸ்தம் செய்தனர். இதையடுத்து ஜூலை இறுதியில் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையடுத்து, தற்போது நடக்க உள்ள ஆசியான் உச்சி மாநாட்டின் நிகழ்வுகளுக்கு இடையே 'கோலாலம்பூர் உடன்படிக்கை' எனும் பெயரில் விரிவான மற்றும் நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக மலேஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கலந்து கொள்கிறார்.தாய்லாந்து ராணி காலமானார் தாய்லாந்தின் முன்னாள் ராணி சிரிகிட் கிடியாகரா, 93, உடல் நலக்குறைவால் காலமானார். ஆசிய நாடான தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாய் ராணி சிரிகிட் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் பிரிந்ததாக அரண்மனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.ராணி சிரிகிட், தாய்லாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார். இந்த அரச தம்பதியினர் பொதுச் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.சமூக சேவைகள், கிராமப்புற ஏழைகளுக்கான திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய கைவினைத்திறன் பாதுகாப்புக்கான பங்களிப்புகள் போன்றவற்றால் ராணி சிரிகிட், 'தேசத் தாய்' என மக்களால் போற்றப்பட்டவர்.அவரது மரணத்தையடுத்து, தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கற்கும் மலேஷிய பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார். தாய்லாந்தில் ஓர் ஆண்டுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை