பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்?
வாஷிங்டன் :அமெரிக்காவின், 47வது அதிபராக, கடந்த 20ல் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இரண்டாவது முறை அதிபரான அவருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று முன்தினம் பேசினார்.அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகள், இந்தோ - பசிபிக் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி உடனான உரையாடல் குறித்து வாஷிங்டனில், நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது:இருதரப்பு உறவுகள் குறித்து, பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். சட்ட விரோத குடியேற்றம் குறித்தும் அவருடன் விவாதித்தேன். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெறுவதில், பிரதமர் மோடி சரியானதை செய்வார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல நட்புறவு உள்ளது. அனேகமாக, அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு வருவார்.இவ்வாறு அவர் கூறினார்.