உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்பெயின், பிரான்சில் மின்வெட்டு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின

ஸ்பெயின், பிரான்சில் மின்வெட்டு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின

பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல்லில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் முடங்கின. முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. ஸ்பெயின் நாட்டில் நேற்று திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. தலைநகர் மாட்ரிட்டில் தானியங்கி எலக்ட்ரானிக் சிக்னல்கள் செயல் இழந்ததை அடுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பார்லிமென்ட் கட்டடம் உட்பட முக்கிய அலுவலகங்களில் மின்தடை ஏற்பட்டதை அடுத்து பொது சேவைகள் முடங்கின. தலைநகர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டதை அடுத்து, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மின்தடையால் மெட்ரோ ரயில் சேவைகள் முடங்கின. முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய பயணியர் பல மணி நேரப் போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர். பார்சிலோனா, வெலெனிகா, சேவில்லே உட்பட பல்வேறு நகரங்களும் இருளில் மூழ்கியதால், மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். விமான சேவை பாதிக்கப்பட்டு, விமான நிலையங்களும் மூடப்பட்டன. ஒரு சில இடங்களில் ஜெனரேட்டர்கள் வாயிலாக விமான நிலைய சேவைகள் வழங்கப்பட்டன. ஜெனரேட்டர்களின் உதவியோடு மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 'தொழில்நுட்பக் கோளாறுகளால் மின் வினியோகம் தடைபட்டுள்ளதைத் தொடர்ந்து, மின் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என, ஸ்பெயினின் 'ரெட் எலக்ட்ரிகா' மின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் போர்ச்சுகல் நாடு முழுதும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டது. போக்குவரத்து முடங்கியதுடன், அத்தியாவசிய சேவைகளும் முடங்கின. கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் இருளில் மூழ்கின. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. போர்ச்சுகலை ஒட்டியுள்ள பிரான்சில் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பல பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கியதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. மின் வினியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளில் மூன்று நாடுகளும் ஈடுபட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி