அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம்; ஓராண்டுக்கு நீட்டிப்பதாக அதிபர் புடின் அறிவிப்பு
மாஸ்கோ: 'அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் பிப்ரவரியில் காலாவதியான பிறகும், அணு ஆயுத உச்சவரம்புகளை மேலும் ஓராண்டுக்கு ரஷ்யா கடைப்பிடிக்கும்' என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிபர் புடின் பேசியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்காவும் ஒப்பந்தத்தை நீட்டிக்கும். ஒப்பந்தத்தின் உச்சவரம்புகளை மதிக்கும் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் பிப்ரவரியில் காலாவதியான பிறகும், அணு ஆயுத உச்சவரம்புகளை மேலும் ஓராண்டுக்கு கட்டாயமாக கடைப்பிடிப்போம். இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் பேசினார்.இந்த ஒப்பந்தம் என்ன?
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே 2010ம் ஆண்டில் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பிப்ரவரி மாதம் 2011ல் நடைமுறைக்கு வந்தது. மேலும் 2021ல் பிப்ரவரி 5, 2026ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு நாடும் 1,550 அணு ஆயுதங்கள் மற்றும் 700 ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறது.இந்த ஒப்பந்தம் 2010ம் ஆண்டு அப்போதைய அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 5ம் தேதி, 2026ம் ஆண்டு காலாவதியாக உள்ள நிலையில், நீட்டிப்பதாக அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில் இந்த முடிவை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது.