உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இரு முனை போருக்கு தயார்: இந்தியாவை வம்பிழுக்கும் பாக்., அமைச்சர்

இரு முனை போருக்கு தயார்: இந்தியாவை வம்பிழுக்கும் பாக்., அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள நீதிமன்றம் அருகே சமீபத்தில் தற்கொலை படையினர் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தினர். இதில், 12 பேர் பலியாகினர்; 36 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தியாவின் ஆதரவுடன் செயல்படும் குழுக்கள் தான் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டினார். குண்டு வெடிப்பு வாயிலாக தலிபான்கள் ஒரு செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளதாகவும், இதற்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு பலம் உள்ளதாகவும் அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தன் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கவாஜா ஆசிப் மற்றொரு ஆத்திரமூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'கிழக்கு எல்லையில் இந்தியாவுக்கும், மேற்கு எல்லையில் தலிபான்களுக்கும் எதிரான இருமுனை போருக்கு பாகிஸ்தான் முழுமையாக தயாராக உள்ளது. முதல் சுற்றில் இறைவன் எங்களுக்கு உதவியது போல், இரண்டாம் சுற்றிலும் எங்களுக்கு உதவுவார்' என, தெரிவித்துள்ளார். தற்போது டில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தையும் வெறும் காஸ் சிலிண்டர் வெடிப்பு எனவும், இந்தியா இச்சம்பவத்தை அரசியலாக்குகிறது எனவும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். கவாஜாவின் பேச்சு கவனத்தை திசை திருப்பும் தீவிர முயற்சி என இந்திய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.சமீபத்தில் ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார். இந்தியாவுடனான, ஆப்கனின் நெருக்கம் பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத கவாஜா, இதற்கு முன் பேசும்போது, இந்தியாவுக்காக, ஆப்கன் தலிபான் அரசு பினாமி போரை நடத்துவதாகவும், ஆப்கன் உடனான பதற்றத்தை அதிகரிப்பதில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இருவர், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒருவர் ராவல்பிண்டியிலும், மற்றொருவர் கைபர் பக்துன்க்வாவிலும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு முன், இவர்களில் ஒருவர், தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவருடன், நீதிமன்றத்துக்கு பலமுறை சென்று அப்பகுதிகளை பார்வையிட்டதாகவும், கைது செய்யப்பட்ட இருவரையும், பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் ஆப்கனை சேர்ந்தவர்!

கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து பாகிஸ்தான் நாட்டு பார்லிமென்டில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி பேசியதாவது: தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இத்தாக்குதலை நடத்தியவர் ஒரு ஆப்கானியர். நீதிமன்றம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு மட்டுமல்ல, கடந்த சில நாட்களுக்கு முன், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா கேடட் கல்லுாரி தற்கொலைபடை தாக்குதலில் ஈடுபட்டவர்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள். இச்செயலில் ஈடுபட உறுதுணையாய் இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி