UPDATED : நவ 17, 2025 04:07 PM | ADDED : நவ 17, 2025 04:06 PM
புதுடில்லி: தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டவுள்ளது. இந்தத் தீர்ப்பு பாரபட்சமானது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அதிரடி தீர்ப்புக்குப் பிறகு 3 பக்க அறிக்கையை ஷேக் ஹசீனா வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:எனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்புகள், தேர்ந்தெடுக்கப்படாத அரசால் வழி நடத்தப்பட்டு வரும் ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளன. அவை பாரபட்சமானவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை. மரண தண்டனை விதித்து, வங்கதேசத்தின் பிரதமரை நீக்கவும், அவாமி லீக்கை ஒரு அரசியல் சக்தியாக இல்லாதபடி செய்யவும் இடைக்கால அரசில் இருக்கும் தீவிரவாத நபர்களின் வெட்கக்கேடான மற்றும் கொலைகார நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.'மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தின் பிற குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன். மனித உரிமைகள் மற்றும் மேம்பாடு குறித்த எனது அரசின் சாதனையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 2010ம் ஆண்டு வங்கதேசத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சேர வழிவகுத்தோம்.மியான்மரில் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம், மின்சாரம் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தினோம். 15 ஆண்டுகளில் 450% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை ஏற்படுத்தினோம். லட்சக்கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டோம். இந்த சாதனைகள் வரலாற்று சாதனைகள். அவை மனித உரிமைகள் மீது அக்கறை இல்லாத ஒரு தலைமையின் செயல்கள் அல்ல. மேலும் முகமது யூனுஸும் அவரது பழிவாங்கும் கூட்டாளிகளும் எந்த சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. எனக்கு எதிரான எந்த உண்மையான ஆதாரமும் இல்லை. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.