UPDATED : அக் 27, 2025 02:36 PM | ADDED : அக் 27, 2025 02:33 PM
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதல் இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தாலும், நேற்று முன்தினம் (அக்.,25) நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் சிறப்பாக பேட் செய்து வந்த ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி, 24 ரன் எடுத்திருந்த போது, ஹர்ஷித் ராணா வீசிய பந்தை தூக்கி அடித்தார். அது பீல்டர் ஸ்ரேயாஸை தாண்டிச் சென்றது. ஆனால், பின்பக்க திசையை நோக்கி ஓடிய அவர், சிறப்பான கேட்ச்சை பிடித்து அற்புதம் நிகழ்த்தினார். இந்தக் கேட்ச் பிடிக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவர் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். உடனடியாக அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில், விலா எலும்பில் ரத்தக்காயம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன்பிறகு ஐசியு பிரிவில் ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.