உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மரில் மீட்புப் பணியில் தொடரும் சவால்கள்!

மியான்மரில் மீட்புப் பணியில் தொடரும் சவால்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மண்டலே: சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள மியான்மரில் மீட்புப் பணிகளில் பல்வேறு சவால்கள் எழுந்து உள்ளன.இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 3,400 பேர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.நிலநடுக்கத்தால், மியான்மரின் 2வது மிகப்பெரிய நகரமான மண்டலே நகர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு இடிபாடுகளுக்குள் தங்களது உறவினர்கள் யாரேனும் உயிருடன் உள்ளனரா என தேடும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உயிரிழந்தவர்களின் பல உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.அதேநேரத்தில் பல்வேறு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதும், பாலங்கள் இடிந்து விழுந்ததும், தொலைத்தொடர்பு முடங்கி உள்ளதும் மீட்புக்குழுவினருக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தி உள்ளது. இத்துடன், அதிநவீன கருவிகள் இல்லாததால், உள்ளூர் மக்கள் உதவியுடன் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றிவிட்டு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இத்துடன் அங்கு 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாவதும், அங்குள்ளவர்களுக்கு சவாலாக உள்ளது. நிலநடுக்கத்திற்கு பிந்தைய மிதமான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதும் மீட்புப் பணிக்கு தடையாக உள்ளது. இதனால், அந்த நேரங்களில் பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.15 லட்சம் பேர் வசிக்கும் மண்டலே நகரில், பொது மக்கள் மத்தியில் நிலநடுக்கத்தின் பயம் இன்னும் அகலவில்லை. இதனால், இரவுப் பொழுதை தூக்கமின்றி கழிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.அதேநேரத்தில் மீட்புப் படையினர் செல்லாத இடங்களும் உள்ளதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இதனால், அங்கு வசிக்கும் மக்களே யாரின் உதவியும் இல்லாமல், அவர்களாகவே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிகழ்வுகளும் நடக்கிறது. அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்களும், குழுவினரை அந்த பகுதிகளுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ளன. விமான நிலையம் சேதமடைந்தது உள்ளதால், இங்கு விமானங்களை தரையிறக்க முடியாத நிலை உள்ளது.தலைநகர் நயிபிடாவ் நகரில், மீட்புப் பணிகள் நடந்தாலும் அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கும், உள்ளூர் மக்களே தங்களால் இயன்ற அளவு மீட்புப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தொலைத்தொடர்பு சாதனங்களும் செயல்படாத காரணத்தினால், முக்கிய நகரங்களை தவிர மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றே அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி இருந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்டு 48 மணி நேரம் தாண்டிவிட்டதால், அவர்கள் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.இச்சூழ்நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிவாரண உதவிகள் வரத்துவங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை