UPDATED : அக் 26, 2025 05:51 PM | ADDED : அக் 26, 2025 04:14 PM
பாரிஸ்: பிரான்சில் உள்ள பாரிஸ் லூவ் அருங்காட்சியகத்தில், மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் என சந்தேகப்படும் நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரான்சின் தலைநகர் பாரிசில் பிரபலமான லூவ் அருங்காட்சியகம் உள்ளது. தினமும், 30,000க்கும் மேற்பட்டோர் பார்வையிடும் இந்த அருங்காட்சியகத்தில் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம், நெப்போலியன் கால நகைகள் பழமையான சிற்பங்கள் என ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சியகத்தில் உள்ள, 'அப்பல்லோ கேலரி'யில் பிரான்ஸ் அரசர்கள் மற்றும் அரசிகளின் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இருசக்கர வாகனத்தில் கடந்த 19 ம் தேதியன்று வந்த மர்ம நபர்கள் பக்கத்து கட்டடத்தில் இருந்து, 'ஹைட்ராலிக்' ஏணி உதவியுடன் அருங்காட்சியகம் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கண்ணாடியை இயந்திரத்தால் உடைத்து கேலரிக்குள் புகுந்துள்ளனர். அங்கிருந்த மாவீரன் நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த அரசன் மற்றும் அரசியின் விலைமதிப்பற்ற ஒன்பது நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. இதனை வைத்து கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசினர்.இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் என சந்தேகப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் பாரிசில் இருந்து தப்பிச் செல்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் பாரிஸ் நகரில் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் பிடிபட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. அவர்களிடம் நடக்கும் விசாரணைக்கு பிறகு கொள்ளை போன நகைகள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.