60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு
நியூயார்க்; கடந்த 1967ம் ஆண்டுக்கு பின், ஐ.நா., கூட்டங்களில் கலந்து கொள்ளும் முதல் சிரியா நாட்டு தலைவர் என்ற பெருமையை அஹமது அல் - ஷரா பெறுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொது சபை கூட்டத்தில் பங்கேற்க, மேற்காசிய நாடான சிரியாவின் அதிபர் அ ஹ மது அல் - ஷரா நியூயார்க் சென்றடைந்தார். ஐ.நா., பொது சபையில் கலந்துகொண்ட கடைசி சிரியா அதிபர் நுாரெட்டின் அல் - அடாசி ஆவார். அவர் கடந்த 1967ம் ஆண்டு ஜூன் மாதம் கலந்து கொண்டார். இதையடுத்து, ஆட்சியை கைப்பற்றிய பஷார் அல் - ஆசாத், நீண்டகாலம் சிரியாவில் ஆட்சி செய்த போதும், சர்வதேச சமூகத்திடம் இருந்து விலகியே இருந்தார். முன்னாள் பயங்கரவாதியான ஷரா, கடந்தாண்டு பஷார் அல் - ஆசாத்திடம் இருந்து சிரியாவின் ஆட்சியை கைப்பற்றினார். இதையடுத்து, கடந்த மே மாதம் சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். சிரியா மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா நீக்கியது.