உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராஜினாமா செய்தார் சிரியா அதிபர் ஆசாத்: ரஷ்யா ஊடகம் தகவல்

ராஜினாமா செய்தார் சிரியா அதிபர் ஆசாத்: ரஷ்யா ஊடகம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ராஜினாமா செய்ததுடன், அமைதியான முறையில் அதிகார மாற்றத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் துவங்கியது. அதிபராக இருந்த பஷர் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் எண்ணத்துடன் இந்த மோதல் ஏற்பட்டது. ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செயல்பட்டன. கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா விமானப்படை மூலம் அவ்வபோது தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக ரஷ்யாவும், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானும் சிரியாவிற்கு உதவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இதை பயன்படுத்தி துருக்கி ராணுவத்தின் உதவியோடு தாக்குதலை தீவிரப்படுத்திய கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்ற துவங்கினர். இன்று தலைநகர் டமாஸ்கசும் அவர்களிடம் வீழ்ந்தது. இதனையடுத்து பஷர் அல் ஆசாத் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பயணித்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் அவரின் நிலை குறித்தும், எங்கு உள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை.இந்நிலையில் பஷர் அல் ஆசாத்தின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தியாக வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பஷர் அல் ஆசாத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஏற்பட்ட முடிவுகளின் படி அதிபர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்த பஷர் அல் ஆசாத், சிரியாவில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும், அதிகார மாற்றம் சுமூகமாக நடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா தலையிடவில்லை.சிரியாவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. அந்நாட்டு மக்கள் வன்முறையை கைவிடுவதுடன், பிரச்னையை அரசியல் ரீதியில் தீர்க்க வேண்டும். அனைத்து தரப்புடன் ரஷ்யா தொடர்பில் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பாலா
டிச 09, 2024 00:04

சிரியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்று திரிந்தால் நன்று இல்லையேல் அடுத்தது இங்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை