பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளை கைப்பற்றியது தலிபான் ராணுவம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது. பாகிஸ்தானின் எல்லை சோதனைச்சாவடிகளை ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் ராணுவம் கைப்பற்றியது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.நம் அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் பாகிஸ்தானில் எல்லைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் 20 இடங்களில் தலிபான் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தாக்குதலில் பாக்., ராணுவத்தின் பல சோதனைச்சாவடிகள் அழிக்கப்பட்டன. நான்கு சோதனைச்சாவடிகளை ஆப்கன் ராணுவம் கைப்பற்றியது.பாக்., ராணுவத்தின் டேங்க், கவச வாகனங்கள், துப்பாக்கிகளை தலிபான் வீரர்கள் கைப்பற்றினர். திடீர் தாக்குதலில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர், ஆப்கன் வீரர்களிடம் சரண் அடைந்தனர்.குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாண சோதனைச்சாவடிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி உறுதி செய்தனர். எல்லையோர பகுதிகளில், வெவ்வேறு இடங்களில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் தொடர்ந்து மோதல் நடக்கிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளனர்.பேச்சுவார்த்தை
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் எல்லைப் பதட்டங்கள் குறித்து கத்தார் கவலை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்னைகளை தீர்க்கவும் கத்தார் அழைப்பு விடுத்தது.