அபுஜா: நைஜீரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்துப் பேசினார். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா - இந்தியா இடையே, 60 ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=owzneziz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 நம்பிக்கை
அங்கு, 60,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். அந்நாட்டின் பல்வேறு முக்கிய துறைகளில், 200க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக நேற்று நைஜீரியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் அபுஜாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நைஜீரிய மக்களுக்கு பிரதமர் மோடி மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை குறிக்கும் விதமாக, அபுஜா நகர சாவி பிரதமரிடம் வழங்கப்பட்டது.அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்துப் பேசினார்.அதன்பின் பிரதமர் மோடி கூறியதாவது:பயங்கரவாதம், பிரிவினைவாதம், கொள்ளையர் அச்சுறுத்தல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை இருநாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய சவாலாக உள்ளன; இவற்றை எதிர்கொள்ள இருதரப்பும் இணைந்து செயல்படும்.நைஜீரியா உடனான உறவுக்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம். இந்த சந்திப்புக்கு பின், இந்த உறவின் புதிய சகாப்தம் துவங்கும் என உறுதியாக நம்புகிறேன்.நைஜீரியாவில் வசிக்கும், 60,000 இந்தியர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் துாண்களாக உள்ளனர். அவர்களுக்கு சிறப்பான வாழ்வை உறுதி செய்துள்ள அதிபர் டினுபுவுக்கு நன்றி.மிகப்பெரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நைஜீரிய மக்களுக்கு, 20 டன் நிவாரண பொருட்களை இந்தியா வழங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு ஒப்பந்தங்கள்
இருநாட்டு பிரதிநிதிகள் தரப்பிலான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி, அதிபர் டினுபு தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியா - நைஜீரியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.நைஜீரிய பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்றார். அங்கு 18, 19ல் நடக்கும், 'ஜி - 20' உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.அதன்பின், 19, 21ல் தென் அமெரிக்க நாடான கயானா செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்திக்கிறார்.
பிரதமருக்கு கவுரவம்
நைஜீரியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் இரண்டாவது உயரிய தேசிய விருதான, 'கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் த நிகர்' என்ற விருது அளிக்கப்பட்டது. இந்த விருது பெறும் இரண்டாவது உலக தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இதற்கு முன், 1969ல் பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் நைஜீரியா செல்வது இதுவே முதல்முறை.