உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பருவநிலை மாற்றத்தின் ஆபத்துகளை தவிர்க்க இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உள்ளன

பருவநிலை மாற்றத்தின் ஆபத்துகளை தவிர்க்க இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உள்ளன

புதுடில்லி: பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களான அதீத வெப்பம், அதீத மழை, கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தவிர்க்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்க இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உலக நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. பருவநிலை மாற்றம் உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இதன் தாக்கத்தை அனைத்து நாடுகளும் அனுபவித்து வருகின்றன. இந்த பிரச்னையை சமாளிக்கவும், எதிர்காலத்தில் தடுக்கவும் ஐ.நா., பருவநிலை மாற்ற அமைப்பு 1992ல் உருவாக்கப்பட்டது. இதில் 197 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தை, 2015ல் ஏற்றுக் கொண்டுள்ளன. அதன்படி, மனிதர்களின் செயல்பாடுகளால் உலகளாவிய வெப்பநிலை ஆண்டுக்கு 1.5 டிகிரி செல்ஷியசை தாண்டக் கூடாது. அதற்கு ஏற்ப உலக நாடுகள், காற்று மாசை ஏற்படுத்தும் கார்பன் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கென கார்பன் பட்ஜெட் என்ற அளவீடு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ௧௯௯௦ - ௨௧௦௦ ஆண்டு வரை ௧,௬௦௦ ஜிகா டன் கார்பனை வெளியிடலாம் என பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஜிகா டன் என்பது 100 கோடி டன். ஆனால், முதல் ௨௦ ஆண்டுகளிலேயே பட்ஜெட்டில் ௫௦ சதவீதத்தை பயன்படுத்தி விட்டோம். தற்போது உலக நாடுகள் ஆண்டுக்கு 40 ஜிகா டன் கார்பன் வாயுக்களை வெளியிடுகின்றன. இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மொத்த பட்ஜெட்டும் காலியாகி விடும். இதனால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என 'உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் குறியீடுகள்' என்ற ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளனர். இந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த 2024ல் உலகளவில் மனிதர்களால் ஏற்பட்ட வெப்பநிலை 1.36 டிகிரி செல்ஷியசாக உயர்ந்தது. இதனால் கடந்த ஆண்டு உலகின் பல பகுதிகளில் அதிக வெப்பம் பதிவானது. மேலும் பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும் காற்றை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளியேற்றமும் இதுவரை இல்லாத உயர்வில் தொடர்கிறது. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடுகளின் அடர்த்தி அதிகரித்துள்ளது.இதன் விளைவாக கார்பன் பட்ஜெட் குறைந்து வருகிறது. இதனால் பருவநிலை பாதிப்பு பிரச்னைகள் தீவிரமடைந்து வருகின்றன. இது உலகப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, முக்கியமாக மக்களுக்கும் நீண்டகால ஆபத்துகளை உண்டாக்கக் கூடியது. ஆப்ரிக்க நாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக மோசமான பருவநிலை நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளன. எனவே அனைத்து நாடுகளும் சொந்த பருவநிலை செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் அதிக பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றியதை ஒப்புக்கொண்டு, தற்போது தடுப்பு நடவடிக்கைகளில் அவர்களாக முன் வந்து, பிற நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் 30வது சர்வதேச பருவநிலை மாநாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடக்க உள்ளது. அதற்கு முன் பிப்ரவரியில் அனைத்து நாடுகளும் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டன. அதில் 197 நாடுகளில் 25 நாடுகள் மட்டுமே திட்ட அறிக்கையை இதுவரை சமர்ப்பித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganapathy
ஜூலை 24, 2025 12:39

மக்களை தேவையில்லாம புரளிகளை பரப்பி பயமுறுத்துவது இவனுங்க வேலை. இப்ப என்ன எல்லாரும் நாளைக்கே செத்தா இந்த எழவு சரியாயிருமா? பருவநிலை மாற்றங்கள் இவ்வுலகில் உயிர்கள் தோன்றுவதற்க்கு முன்பிருந்தே நடந்துவரும் ஒரு நிகழ்வு. அது எல்லா உயிரிகளும் எதிர்காலத்தில் அழிந்தாலும் நிற்காது நடந்து கொண்டே இருக்கும்.


Iyer
ஜூலை 24, 2025 06:33

மாமிச உணவாலும் - ரசாயன விவசாயத்தாலும் தான் 70% Global Warming உண்டாகிறது. இவை இரண்டிற்கும் தடை விதிக்கணும்


அப்பாவி
ஜூலை 24, 2025 06:12

அப்புறம் அதுவே பழகிப் போயிரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை