வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி கொடுப்பேன்' என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.4.5 கோடி டாலர்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார். அதிபர் தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக, உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்தார். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளர். டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதி கொடுப்பதாகவும் மஸ்க் அறிவித்துள்ளார்.நேர்காணல்
கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர். முன்னாள் அதிபர் டிரம்பை கைதுாக்கி விடுவதற்கான அனைத்து வேலைகளையும் எலான் மஸ்க் வேலை செய்து வருகிறார். அரசியல் வட்டாரங்கள்
டிரம்ப் அதிபரானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருப்பதற்காக, அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய டிரம்ப், ''அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன்,'' என வெளிப்படையாக பேசியுள்ளார்.எதிர்பார்ப்பு
தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நேர்காணல் நடத்தி டிரம்ப் மனதில் மஸ்க் இடம்பிடித்து விட்டார். அவருக்கு வீட்டு வாசல் தேடி அமைச்சர் பதவி வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.'தடாலடியாக பேசவும், முடிவு எடுக்கவும் தயங்காத இந்த இரண்டு பேரும் அதிபராகவும், அமைச்சராகவும் ஆனால் நாட்டில் என்னவெல்லாம் நடக்குமோ' என்று ஆளும் ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர்.