போதைப்பொருள் கடத்திய வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப் படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதையடுத்து, வெனிசுலாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், போதைப் பொருட்களை கடத்தும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் சமீபத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், தற்போது மீண்டும் வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலா நாட்டு கப்பல் பற்றி எரியும் 33 வினாடிகள் வீடியோவை சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:எனது உத்தரவின் பேரில், போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு கப்பல் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த கப்பலில் பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்ட போது தாக்குதல் நடத்தப்பட்டது.கப்பல் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத போதைப்பொருள் கடத்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடையது என்பதை உளவுத்துறை உறுதிப்படுத்தியது. சர்வதேச நீர்நிலைகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கப் படைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.