பிரிட்டன் அமைச்சரவை மாற்றம் பெண்களுக்கு முக்கிய துறைகள்
லண்டன்:பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்து வருகிறார், அதில் பெண் எம்.பி.,க்கள் பலருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த அரசில் துணை பிரதமராக தொழிலாளர் கட்சியின் துணை தலைவர் ஏஞ்சலா ரெய்னர் பதவி வகித்தார். அவர் தன் பெயரில் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புக்கு முத்திரைத்தாள் கட்டணத்தை குறைவாக செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது விசாரணையில் உறுதியானது. இதனால் அவர் துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் புதிய துணை பிரதமராக வெளியுறவு அமைச்சராக இருந்த டேவிட் லேமியை, 53, பிரதமர் ஸ்டாமர் நியமித்துள்ளார். இது தவிர 12 பேரின் அமைச்சர் பதவிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதில் நான்கு பேர் பெண்கள். யுவெட் கூப்பர், வெளியுறவு; ஷபானா மஹ்மூத், உள்துறை; லிஸ் கெண்டால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; எம்மா ரெனால்ட்ஸ், சுற்றுச்சூழல் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பெண் எம்.பி.,யான ரேச்சல் ரீவ்ஸ் நிதி அமைச்சராக உள்ளார். நிதி, உள்துறை, வெளியுறவு ஆகிய அமைச்சர் பதவிகளை ஒரு சேர பெண்கள் நிர்வகிப்பது இதுவே முதல் முறையாகும்.