வாஷிங்டன்: சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளின் கீழ், அரசுப் பணிகளில் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில், டி.இ.ஐ., எனப்படும் சிறப்பு திட்ட அலுவலகங்களை உடனடியாக மூடவும், அதில் உள்ள ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் அனுப்பவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அமெரிக்கர்களே முன்னுரிமை என்ற கொள்கை உடைய டிரம்ப், தன் முந்தைய பதவி காலத்திலும் இது தொடர்பாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நடவடிக்கை
அதன்படி, 2020ல் அதிபராக இருந்த அவர், டி.இ.ஐ., என்று கூறப்படும், 'டைவர்சிட்டி, ஈக்வாலிட்டி மற்றும் இன்க்லுாஷன்' எனப்படும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்குதல் திட்டத்தின் வாயிலாக அரசுப் பணியில் சேர்க்கும் மற்றும் பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்ட அலுவலகங்கள் அமைப்பதற்கு தடை விதித்திருந்தார்.அவருக்குப் பின், 2021ல் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், தன் முதல் உத்தரவில், இந்த தடையை நீக்கினார். தற்போது அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ஜோ பைடனின் பல முந்தைய உத்தரவுகளுக்கு தடை விதித்துள்ளார்.அதன்படி, டி.இ.ஐ., முறையில் அரசுப் பணியாளர்களை நியமிக்கும் முறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவைத் தொடர்ந்து, அரசின் பணியாளர் நிர்வாகத் துறை, அனைத்து அரசு துறைகள், வாரியங்கள், தொழில் துறைகள் உள்ளிட்டவற்றுக்கு புதிய உத்தரவுகளை அனுப்பியுள்ளது. அதில், டி.இ.ஐ., முறையில் செயல்படும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் அதில் பணியாற்றுவோர் பட்டியலை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, இதில் பெரும்பான்மையினரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. டி.இ.ஐ., திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகளை உடனடியாக நிறுத்தும்படியும் அதில் கூறப்பட்டுள்ளது.எவ்வளவு பணியாளர்களை நீக்கப் போகிறோம் என்பது குறித்து ஒவ்வொரு துறையும் அறிக்கை அளிக்கும்படி, அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.'அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை. டி.இ.ஐ., மற்றும் அது தொடர்பான பல பெயர்களில், தனக்கு அரசியல் ரீதியில் வேண்டியவர்களை பணியில் சேர்ப்பதற்கு, ஜோ பைடன் அரசு, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளது' என, டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.மேலும், இந்த திட்டம், மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், தகுதி உள்ளவர்களே அரசுப் பணியில் இருக்க வேண்டும் என்றும் தன் உத்தரவில் டிரம்ப் கூறியுள்ளார். குற்றச்சாட்டு
டி.இ.ஐ., முறை என்பது அமெரிக்காவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு அரசும், அதற்கேற்ப அதில் திருத்தங்களை செய்து வந்தன. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தங்களுடைய ஆதரவாளர்களுக்கு பணி வழங்கவே இந்த திட்டம் பயன்படுத்தப்படுவதாக, குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன.