உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரிய வகை கனிமங்கள் வாங்க ஜப்பானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

அரிய வகை கனிமங்கள் வாங்க ஜப்பானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

டோக்கியோ: அரிய வகை கனிமங்கள் வினியோகத்தில் கெடுபிடி காட்டி வரும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டு பிரதமர் சனே டகாய்சியை சந்தித்து இரு முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆசிய நாடுகளுக்கான தன் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானுக்கு சென்றுள்ளார். சமீபத்தில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற சனே டகாய்சியை டோக்கியோவில் டிரம்ப் சந்தித்துப் பேசினார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரானது பெரிய விஷயம் என டகாய்சியை பாராட்டிய டிரம்ப், ஜப்பானுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து, இரு நாடுகளிடையே முக்கிய இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜப்பானில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதற்கு ஈடாக, அமெரிக்காவின் முக்கிய தொழில்துறைகளில் 45.8 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது. இம்முதலீடுகள் செமிகண்டக்டர், கப்பல் கட்டுதல், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு துறைகளில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொழிலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமங்களின் வினியோகச் சங்கிலியை பாதுகாப்பது இரண்டாவது ஒப்பந்தத்தின் இலக்காகும். அரிய மண் தாது மற்றும் முக்கிய கனிமங்களின் வினியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவும், வினி யோக சங்கிலியின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்கவும் தேவையான ஒத்துழைப்பை அதிகரிப்பது இதன் நோக்கமாகும். இச்சந்திப்பின் போது, அ மெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவை கவுரவிக்கும் வகையில், அடுத்தாண்டு அமெரிக்காவுக்கு 250 செர்ரி மரங்க ளை ஜப்பான் பரிசளிக்கும் என பிரதமர் சனே டகாய்சி அறிவித்தார்.

அமைதிக்கான நோபல்

டிரம்ப் பெயர் பரிந்துரை

இந்தியா - பாகிஸ்தான் உட்பட பல போர்களை நிறுத்தியதால், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். மேலும், அவருடைய பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக, பாகிஸ்தான் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் கூறினர். நடப்பாண்டுக்கான நோபல் பரிசு கிடைக்காத நிலையில், அடுத்தாண்டில் பெறும் நோக்கத்தோடு டிரம்ப் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மலேஷியாவில் சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியின்போது, கம்போடியா - தாய்லாந்து இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயரை பரிந்துரைப்பதாக கம்போடியா பிரதமர் ஹன் மானெட்டால் கூறினார். தற்போது இந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி இணைந்துள்ளார். நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரிந்துரைப்பதாக அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி