கீவ்,: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், இன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி, சர்வதேச ராணுவ அமைப்பான நேட்டோவில் இணைய, 2022ல் முயற்சித்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தும் என்றும், இணையும் முயற்சியை கைவிடாவிட்டால் போர் தொடுப்போம் என்றார். 13,000 பேர் பலி அதை ஜெலன்ஸ்கி கேட்கவில்லை. இதனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் இறந்து உள்ளனர். அவர்களில் 700க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மூன்று ஆண்டு கால போரில், ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் உக்ரைனின் கிழக்கு பகுதிகளான டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. மேலும் பல பகுதிகள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவற்றை உக்ரைன் மீட்டுவிட்டது. இந்நிலையில், போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம், அமெரிக்காவின் அலாஸ்காவில் சந்தித்து பேசினர். இதில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டவில்லை, எனினும் அதற்கான பெரும் முன்னேற்றம் இந்த பேச்சில் ஏற்பட்டதாக இருவரும் தெரிவித்தனர். இனி, போர் நிறுத்தம் ஜெலன்ஸ்கி கையில் உள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார். புடின் உடனான கூட்டம் குறித்து ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒன்றரை மணி நேரம் டிரம்ப் விளக்கினார். இதைத் தொடர்ந்து வாஷிங்டனில் சந்திக்கவும் அழைப்பு விடுத்தார். கேள்விக்குறி அவரது அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று டிரம்பை சந்திக்கிறார். முன்னதாக பிப்ரவரி 28ல் டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்தது. அப்போது ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் காரசாரமாக பேசினார்; கடிந்துகொண்டார். வெள்ளை மாளிகைக்கு உரிய மரியாதையை தராமல் நடந்ததாக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றம்சாட்டினார். இதனால் ஜெலன்ஸ்கி பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில், இரு தலைவர்களும் மீண்டும் இன்று சந்தித்து பேச உள்ளனர். இதில், ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை அவர்களுக்கு விட்டுத்தருவது, உக்ரைனுக்கு பல லட்சம் கோடி ரூபாய் ராணுவ உதவி செய்ததற்காக, அந்நாட்டின் அரிய கனிமங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கு ஜெலன்ஸ்கி சம்மதிப்பாரா என்பது பெரிய கேள்விக்குறி. இதனால் இந்த முறையும் ஜெலன்ஸ்கி - டிரம்ப் இடையே வார்த்தை மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க வேண்டும் என்பதில் ஐரோப்பிய யூனியன் கவனமுடன் உள்ளது. எனவே ஜெலன்ஸ்கி உடன் ஐரோப்பிய யூனியன் தலைவர் உருசுலா வான் டேர், ஜெர்மன் பிரதமர் பிரெட்ரிச் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் என ஒரு பெரும் படை டிரம்பை சந்திக்க உள்ளது.
புடினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்
அமைதிக்கான கடிதம் என்ற பெயரில் ரஷ்ய அதிபர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'ஒவ்வொரு குழந்தையும், அவர்கள் கிராமத்தில் பிறந்திருந்தாலும், நகரில் வசித்தாலும் தங்கள் இதயத்தில் ஒரு கனவை வைத்திருப்பர். அன்பு, வாய்ப்பு, ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை குழந்தைகள் கனவு காண்கின்றனர். 'பெற்றோராக, அடுத்த தலைமுறையின் நம்பிக்கையை வளர்ப்பது நம் கடமை. தலைவர்களாக, குழந்தைகளைப் பாதுகாப்பது நம் பொறுப்பு. புடின், நீங்கள் இதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
ரஷ்யா மிகப்பெரிய சக்தி
'உக்ரைன் தற்போதைய போர் பகுதிகளில் சண்டையை நிறுத்துவதற்கு உடன்பட வேண்டும். டொனெட்ஸ்க் மாகாணத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யாவுக்கு வழங்க வேண்டும்' என ரஷ்ய அதிபர் புடின் ஒரு முன்மொழிவை அலாஸ்கா உச்சி மாநாட்டில் வழங்கியுள்ளார். இந்த செய்தியை ஜெலன்ஸ்கியிடம் அதிபர் டிரம்ப் தனிப்பட்ட உரையாடலில் கூறினார். அப்போது, 'ரஷ்யா மிகப்பெரிய சக்தி, நீங்கள் அப்படி இல்லை' என்றும் கூறியுள்ளார்.