போதைப்பொருள் கடத்திய வெனிசுலா கப்பல் தகர்ப்பு ஒரே வாரத்தில் 3வது சம்பவம்
நியூயார்க்:தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப் படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதையடுத்து, வெனிசுலாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப் பொருட்களுடன் சென்ற இரண்டு கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் சமீபத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது; இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அமெரிக்க கடற்படையினர், வெனி சுலாவுடன் தொடர்புடைய மூன்றாவது கப்பலை தாக்கி அழித்ததாக டிரம்ப் நேற்று கூறினார். இது தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்க உளவுத்துறை போதைப்பொருட்களுடன் கப்பல் ஒன்று செல்வதை உறுதிப்படுத்தினர். அந்த கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் துல்லியமாக ஏவுகணையை வீசித் தாக்கி அழித்தன. அமெரிக்கர்களுக்கு கொடிய விஷத்தை வினியோகிக்க சென்றவர்களுக்கு எங்கள் வீரர்கள் மரண அடி கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும், வேகமாக கடலில் செல்லும் ஒரு கப்பல் ஏவுகணைகளால் தாக்கப்பட்டு, தீப்பிழம்பில் மூழ்குவதை காட்டும் தாக்குதல் வீடியோவையும் டிரம்ப் வெளியிட்டார். ஆனால், கப்பல் எந்த இடத்தில் இருந்தது என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.