உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய துாதரகத்தை முற்றுகையிடுகிறோம் இங்கே வராதீர்கள்: -காலிஸ்தான் மிரட்டல்

இந்திய துாதரகத்தை முற்றுகையிடுகிறோம் இங்கே வராதீர்கள்: -காலிஸ்தான் மிரட்டல்

ஒட்டாவா: கனடாவில் உள்ள இந்திய துாதரகத்தை முற்றுகையிடப் போவதாக, 'சீக்கியர்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023ல் கொல்லப்பட்டார். இதில் இந்தியா மீது அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதையடுத்து, இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள், கனடாவில் உள்ள இந்தியத் துாதரகம், வழிபாட்டு தலங்களில் தாக்குதல்களில் ஈடுபட்டன. கனடா பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டப் பின், இப்போதுதான், இந்தியா, கனடா உறவு மீண்டும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை தளமாகக் கொண்டு, கனடாவிலும் இயங்கும் சீக்கியர்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பு, கனடா வான்கூவரில் உள்ள இந்திய துாதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் படுகொலையில் இந்திய துாதரக அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்லிமென்டில் தெரிவித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் இந்திய துாதரகங்கள், காலிஸ்தானியர்களை குறி வைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருகின்றன. நாளை காலை 8:00 மணி தொடங்கி 12 மணிநேரத்துக்குள் இந்திய துாதரகத்தை முற்றுகையிட உள்ளோம். நாளை இந்திய துாதரகத்திற்கு வர திட்டமிட்டிருந்தவர்கள் வேறொரு நாளுக்கு அதை திட்டமிடவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், கனடாவின் இந்திய துாதர் தினேஷ் பட்நாயக்கின் முகம் கொண்ட போஸ்டரை வெளியிட்டு, கனடாவில் இந்திய ஹிந்துத்துவாவின் புதிய முகம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திடமிருந்தோ அல்லது வான்கூவரில் உள்ள இந்திய துாதரகத்திடமிருந்தோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Thirumal Kumaresan
செப் 19, 2025 09:37

அங்கு அரசு செயல்படுகிறதா, ஒரு தீவிரவாத அமைப்பு இப்படியான அறிக்கை விட்டால் அதன் பொருள் அதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை