போரின் போது அமெரிக்கா சார்பில் பேசியது என்ன? ஜெய்சங்கர் விளக்கம்
நியூயார்க் : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்த போது அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பிரதமர் மோடியிடம் என்ன பேசினார் என்பது குறித்த தகவலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தி உள்ளார்.நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு பயணமாக நேற்று முன் தினம் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் 'பயங்கரவாதத்திற்காக மனிதர்கள் தந்த விலை' என்ற தலைப்பில் நடந்த கண்காட்சியை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து வாஷிங்டனில் நடந்த, 'குவாட்' எனப்படும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் அடங்கிய கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். இதற்கிடையே அமெரிக்காவின், 'நியூஸ்வீக்' பத்திரிகைக்கு, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் துவங்க காரணமான காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், போர் நிறுத்தம் ஆகியவை குறித்து பேட்டியளித்தார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் சுற்றுலா பயணியர், ௨௬ பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அந்த சம்பவம் நாட்டையே அதிரவைத்தது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.அதில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: போர் நிறுத்தத்திற்கும், அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் மே 9ம் தேதி நள்ளிரவு தொலைபேசி வாயிலாக பேசும் போதும் நானும் பிரதமரின் அறையில் இருந்தேன். அப்போது வான்ஸ் 'ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையால் இந்தியாவின் மீது பாகிஸ்தான் மிகப் பெரிய தாக்குதலை நடத்துவர். சில விஷயங்களை எங்களால் ஏற்க முடியாது' என்றார்.'பாகிஸ்தானின் அச்சுறுத்தலை பொருட்படுத்த மாட்டேன், தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தருவோம்' என பிரதமர் கூறினார். வான்ஸ் பேசிய பின் மறுநாள் காலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ என்னை அழைத்து, 'பாகிஸ்தான் தரப்பில் பேச்சு நடத்த தயாராக உள்ளனர்' என்றார். அன்று பிற்பகல் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், மேஜர் காஷிப் அப்துல்லா இந்தியாவுக்கான ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கயாவை நேரடியாக அழைத்து போரை நிறுத்தும் படி கோரினார். அதன் படியே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.