உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேஜர் சர்ச்சையில் சிக்கிய இந்தியர் எங்கே?: குடும்பத்துடன் மாயமானதால் குழப்பம்

பேஜர் சர்ச்சையில் சிக்கிய இந்தியர் எங்கே?: குடும்பத்துடன் மாயமானதால் குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓஸ்லோ: லெபனானில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திய, 'பேஜர்' சாதனத்தை தயாரித்த நிறுவனம், கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் குடும்பத்துடன் மாயமாகி உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில், அதன் அண்டை நாடான லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து சமீபத்தில் மின்னணு தாக்குதல் நடந்தது. பயங்கரவாதிகள் பயன்படுத்தும், பேஜர் எனப்படும் தகவல் அனுப்ப உதவும் சாதனம், வாக்கி - டாக்கி ஆகியவை வெடித்துச் சிதறின. இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஒப்பந்தம்

இந்த சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பேஜர்கள், ஆசிய நாடான தைவானைச் சேர்ந்த 'கோல்ட் அப்பல்லோ' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என தெரியவந்தது. ஆனால், இந்த குறிப்பிட்ட பேஜர் சாதனங்களை, தன் அங்கீகாரம் பெற்றுள்ள ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் புடபெஸ்டில் உள்ள, பி.ஏ.சி., கன்சல்டிங் என்ற நிறுவனமே தயாரித்து அளித்ததாக, தைவான் நிறுவனம் தெரிவித்தது. பி.ஏ.சி., நிறுவனம், அந்த பேஜரை வடிவமைத்து, 'நார்ட் குளோபல்' என்ற நிறுவனத்துக்கு அதை தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கியதாக தெரிகிறது. விசாரணையில், பல்கேரியாவில் பதிவு செய்யப்பட்ட, 'நார்ட் குளோபல்' நிறுவனத்தின் உரிமையாளர் ரின்சன் ஜோஸ் என்பதும், அவர் நார்வே குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரிந்தது. தொடர் விசாரணையில் இவர், கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் என்பதும், சில ஆண்டுக்கு முன் மேல்படிப்புக்காக நார்வே சென்றவர், அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்று, திருமணம் செய்து, அங்கேயே இருந்து வருவது தெரியவந்தது. 'நார்ட் குளோபல்' நிறுவனம், பல்கேரியாவில் உள்ள தன் உற்பத்தி மையத்தில், மின்னணு சாதனங்களை தயாரித்தது தெரியவந்தது.

விசாரணை

இது தொடர்பாக, பல்கேரியாவின் உளவு அமைப்பான, டி.ஏ.என்.எஸ்., விசாரணை நடத்தியது. அது நடத்திய விசாரணையின்போதுதான், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ரின்சன் ஜோஸ் என்பதும், அவர் நார்வே குடியுரிமையைப் பெற்றவர் என்பதும் தெரியவந்தது.ஆனால், லெபனானில் வெடித்த பேஜர்கள், தங்கள் நாட்டில் உள்ள ரின்சன் ஜோசின் ஆலையில் தயாரிக்கப்படவில்லை என்பதை பல்கேரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, 37 வயதாகும் ரின்சன் ஜோஸ், கடந்த சில நாட்களாக எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருடைய மனைவியுடனும் தொடர்பு கொள்ள உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், அவர்களுடைய நிலைமை குறித்த அச்சம் எழுந்துள்ளது.

பெண் அதிகாரி மறுப்பு!

லெபனானில் வெடித்த பேஜர்கள், தைவானைச் சேர்ந்த கோல்ட் அப்பல்லோ என்ற நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். ஆனால், இவற்றைத் தயாரிக்கும் உரிமத்தை, ஹங்கேரியைச் சேர்ந்த, 'பி.ஏ.சி., கன்சல்டிங்' என்ற நிறுவனத்துக்கும் கொடுத்திருந்ததாக கோல்ட் அப்பல்லோ கூறியுள்ளது. இதைத் தவிர, ரின்சன் ஜோசின் நிறுவனத்துக்கும் பேஜர் தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பி.ஏ.சி., கன்சல்டிங் நிறுவனத்தின் பெண் தலைமை செயல் அதிகாரியான கிறிஸ்டியானா பார்சோனி ஆர்சிடயகோனா, 49, மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏழு மொழிகளை பேசக் கூடிய அவர், தாது இயற்பியல் தொடர்பாக, பிஎச்.டி., படித்தவர்.ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தனியாக வசித்து வந்தார். லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் வெளியுலகுக்கு வராமல் உள்ளார்.பேஜர் வடிவமைக்கும் பணி மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், தைவான் நிறுவனத்துக்கும், அதை தயாரிக்கும் நிறுவனத்துக்கும், வடிவமைப்புகளை மட்டுமே வழங்கியதாக அவர், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தங்களுடைய நிறுவனம் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ram
செப் 24, 2024 12:31

மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா


kulandai kannan
செப் 22, 2024 13:33

கரகாட்டக்காரன் கார் போல் கதை நீள்கிறது.


Kasimani Baskaran
செப் 22, 2024 07:06

...வாழ்வை மீட்டவர் என்ற பெருமை வயநாட்டுக்காரருக்கு உண்டு என்று நினைக்கையில் புல்லரிக்கிறது.


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 06:53

மலையாளியா கொ...யாளியா என்று அவர்களே சொல்வார்கள் .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை