உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் உலக தலைவர்கள் பங்கேற்பு

போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் உலக தலைவர்கள் பங்கேற்பு

வாட்டிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிஸ் விருப்பப்படி, அவருடைய உடல், வாட்டிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி சர்ச்சில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. உலகத் தலைவர்கள் பலர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், 88, உடல் நலக் குறைவால் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.அவரது உடல், ஐரோப்பிய நாடான இத்தாலியின் வாட்டிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்களில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து, அவருடைய இறுதிச்சடங்குகள் மற்றும் உடல் அடக்கம் நேற்று நடந்தது. தன்னை, வாட்டிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி சர்ச்சில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும், ஏழை, எளிய மக்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார்.இதன்படி, புனித பீட்டர்ஸ் சர்ச்சில் நேற்று அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன. கார்டினல்கள் குழு தலைவர் கியோவானி பாஸ்டிஸ்டா ரே, 91, இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தினார்.இறுதிச் சடங்குகளில், நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், பிரிட்டன் இளவரசர் வில்லியம் உட்பட பல நாடுகளின் அரச குடும்பத்தினர் என, 160க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சில் இருந்து 6 கி.மீ., துாரத்தில், வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி சர்ச்சுக்கு, போப்பின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.அப்போது, சாலைகளின் இரு பக்கங்களில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்திருந்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். 100 ஆண்டுகளுக்குப் பின், போப் ஒருவரின் உடல் வாட்டிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை