உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக செய்திகள்

உலக செய்திகள்

சூடான் 300 கிராம மக்களை கொன்ற துணை ராணுவ படை

கார்துாம்: உலகின் நீண்ட கால உள்நாட்டு போர் நடக்கும் சூடானில், ஆர்.எஸ்.எப்., எனப்படும் விரைவு ஆதரவுப் படை என்ற துணை ராணுவப் படை, 300 கிராம மக்களை கொன்றுள்ளது.வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், 2023 முதல் ராணுவம், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவம் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், வடக்கு கோர்தோபான் பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்தில், ஆர்.எஸ்.எப்., தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அங்குள்ள சில கிராமங்களில், கடந்த சில நாட்களில் இரக்கமின்றி நடத்திய தாக்குதல்களில், 300க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, பலர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

நேபாளம் வேலைக்கு லஞ்சம் வாங்கிய புகாரில் அமைச்சர் ராஜினாமா

காத்மாண்டு: அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நேபாளத்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் பொது நிர்வாகத் துறை அமைச்சர் ராஜ்குமார் குப்தா, பதவியை ராஜினாமா செய்தார்.அரசு வேலை வாங்கித் தருவதற்கும், பணியிடமாற்றம் செய்வதற்கும் லஞ்சம் கேட்டதாக, நம் அண்டை நாடான நேபாளத்தின் அமைச்சராக உள்ள ராஜ்குமார் குப்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக அவர் பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியானது. மேலும், அவருடைய வீட்டில் பண மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தது தொடர்பான படங்களும் வெளியாயின.இந்நிலையில், பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, ராஜ்குமார் குப்தா நேற்று சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, தன் நேர்மையை நிரூபிக்கும் வகையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ராஜ்குமார் குப்தா கூறியுள்ளார்.

அமெரிக்கா கல்வி துறையில் 1,400 பேர் நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வித் துறையில், 1,400க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். அரசு துறைகளில் ஆட்குறைப்பு செய்யும் உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். ஏற்கனவே, வெளியுறவுத் துறை, நீதித் துறையில் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, கல்வித் துறையில், 1,400க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மடகாஸ்கர் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆண்மையை நீக்க கோர்ட் உத்தரவு

அன்டனநாரிவோ: மடகாஸ்கரில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றவருக்கு, ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்ய அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, மிகக் கடுமையான தண்டனை வழங்கும் சட்டம், கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது.இந்நிலையில், ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு, அறுவை சிகிச்சை வாயிலாக ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிட்டது.இதைத் தவிர, ஆயுள் தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை