மெக்சிகோவில் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் போராட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்ட மேயர் கார்லோஸ் மான்சோவிற்கு நியாயம் கேட்டும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்ட காசத்தை கட்டுப்படுத்த தவறிய அதிபர் பதவி விலகக்கோரியும் அந்நாட்டு 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மிச்சோகான் மாகாணத்தில் உள்ள உருவான் நகரத்தின் மேயராக இருந்தவர் கார்லோஸ் மான்சோ. இவர் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதையடுத்து, அவர் கடந்த 1ம் தேதி சுட்டுக் கொல்லப் பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மான்சோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் மீது அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர். போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரம் வழியாக பதாகைகளை ஏந்தி 'நாங்கள் அனைவரும் கார்லோஸ் மான்சோ தான்' என முழக்க மிட்டபடி பேரணியாக சென்றனர். இப்பேரணி அந்நாட்டு அதிபரான ஷெய்ன்பாம் தங்கியுள்ள அரண்மனை உள்ள பகுதியான சோகலோவை அடைந்த போது, முகமூடி அணிந்த சில போராட்டக்காரர்கள், அரண்மனையின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தபோது, போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீசார் என கூறப் படுகிறது. வன்முறையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.