வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். வேலை இல்லை என்று சுற்றித்திரியும், அரசை குறைகூறிக்கொண்டு திரியும் மாணவர்கள் இதுபோன்று தன்னிச்சையாக சாதிக்கவேண்டும்.
வாஷிங்டன்: இந்திய வம்சாவளி பள்ளி நண்பர்கள் தங்கள் 22 வயதில் சுயமாக சம்பாதித்து உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாக, ' போர்ப்ஸ்' பத்திரிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை பொது வாக பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள், இளம் சாதனையாளர்களின் சொத்து மதிப்பு மற்றும் தரவரிசையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது, மிகவும் இளம் வயதில் சுயமாக சம்பாதித்து உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களானவர்களின் தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது, 22 வயதாகும் இந்திய வம்சாவளி பள்ளி நண்பர்களான ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் சூர்யா மிதா, அமெரிக்க பள்ளி நண்பரான பிரெண்டன் புடி உடன் இணைந்து ஏ.ஐ., ஆட்சேர்ப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான 'மெர்கோர்'வை உருவாக்கினர். இந்நிறுவனத்துக்காக 3,080 கோடி ரூபாய் திரட்டியுள்ளனர். இதன் வாயிலாக அந்நிறுவனத்தின் மதிப்பு 83,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த 2008ல், 23 வயதில் இளம் கோடீஸ்வரரான, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கை, இவர்கள் விஞ்சியுள்ளனர். மெர்கோர் நிறுவனத்தில், ஆதர்ஷ் ஹிரேமத், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், சூர்யா மிதா நிர்வாகத் தலைவராகவும், பிரெண்டன் புடி தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகித்து வருகின்றனர். ஆதர்ஷ் பெற்றோர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். சூர்யாவின் பெற்றோர் புதுடில்லியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் உள்ள பெல்லார்மைன் கல்லுாரிக்கு சொந்தமான பள்ளியில் படித்த போது நண்பர்களாயினர். பிரெண்டன் புடி சூர்யாவுடன் கல்லுாரியில் படித்த போது நண்பரானார். கடந்த 2023ல் துவங்கப்பட்ட மெர்கோர் நிறுவனம், ஆரம்பத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான இந்திய மென்பொறியாளர்களை இணைக்கும் ப்ரீலான்ஸ் தளமாகவே இருந்தது. இதையடுத்து மிக விரைவில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு பயிற்சி அளிக்க தேவைப்படும் நிபுணர்களை வழங்கும் சேவைகளில் கவனம் செலுத்த துவங்கியதே, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது ஓப்பன் ஏ.ஐ., ஆன்த்ரோபிக், கூகுள் டீப்மைண்டு மற்றும் பல முன்னணி ஏ.ஐ., ஆய்வகங்களுக்கு நிபுணர்களை மெர்கோர் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். வேலை இல்லை என்று சுற்றித்திரியும், அரசை குறைகூறிக்கொண்டு திரியும் மாணவர்கள் இதுபோன்று தன்னிச்சையாக சாதிக்கவேண்டும்.