உள்ளூர் செய்திகள்

ஆஷாட நவராத்திரி

ஆஷாடம் என்றால் நட்சத்திர கூட்டத்தை குறிப்பது, பூர்வ ஆஷாடம் என்றும் உத்திர ஆஷாடம் என்றும் இரு கூட்டங்கள் உண்டு, அது தமிழில் பூராடம், உத்திராடம் என மருவிற்று, இந்த நட்சத்திரமொன்றோடு பவுர்வணமி வரும் மாதம் ஆஷாட மாதம், அது தமிழில் ஆனிமாதம் ஆயிற்று. அந்த மாதத்தில் அமாவாசை முதல் நவமி வரை வரும் காலங்கள் ஆஷாட நவராத்திரியாக கருதபடும் அவ்வகையில் அது இப்பொழுது நடக்கின்றது.நான்கு நவாத்திரகள் இந்துக்களுக்கு 4 நவராத்திரிகள் உண்டு. வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி அதாவது பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள். ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி, ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள். புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி,புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள். தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி,தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் இந்த நான்கு நவராத்திரிகளும் குறிப்பிட்ட பெண் தெய்வங்களுக்கு அர்பணிக்கபட்டவை, அவ்வகையில் இந்த ஆஷாட நவராத்திரி வராஹி அம்மனுக்குரியது வராஹி அம்மன், வலுவான அவதாரங்களில் ஒருத்தி, ஏழு சப்த கன்னியரில் ஒருத்தி. முருகன் சூரனை வதம் செய்ய சென்றபொழுது ஒன்பது தளபதிகள் என பெரும் சக்திகள் அவதாரமாக வந்தது போல, வராகி அம்மனுக்கு துணையாக அவதரித்தவள் ஆஷாட மாத பஞ்சமி திதியில் அவள் அவதரித்தாள். வராஹி தேவிக்கு வராகத்தின் பன்றிஉருவம் கொடுத்து அமர்த்தி வழிபட சொன்னார்கள் ஞானியர், விஷ்ணு கூட வராஹ அவதாரத்தில் அந்த உருவமேதான் எடுத்தார். ஏன் அந்த உருவம் கொடுத்தார்கள் பன்றி என்பது வேறு, வராஹம் என்பது வேறு. பன்றி அசுத்தமானது ஊர்களில் மக்களை அண்டி வாழும் இயல்புடையது கண்டதையும் தின்னும் வழமை உடையது. வராஹம் மலைகளிலும் காடுகளிலும் வாழும் பலமான மிருகம், பன்றியின் சாயலில் யானை போல கொம்பு தந்தங்களோடு நிற்கும், சுத்தமான தாவரபட்சி யானை போல பலமானது. வராகத்துக்கு எந்த விலங்குக்கும் இல்லா சிறப்பு ஒன்று உண்டு அது அகழ்ந்தெடுப்பது. பூமியினை தோண்டி சென்று கிழங்கும் இதர வேர்களையும் கண்டறியும் சக்தி வராகத்துக்கு மட்டும்தான் உண்டு, காட்டில் பலமானதும் வெல்ல முடியாதமுமான அந்த வராஹம் ஒன்றே பூமியினை அகழும். இதை கவனித்த ரிஷிகள் மனதின் ஆழம் வரை சென்று ஆசை , அகங்காரம், வன்மம், கோபம், காமம் என எல்லாவற்றையும் வேறோடு கிள்ளி எறியும் பொருட்டு வாராகி தேவி வழிபாட்டினை தந்தார்கள். வராஹத்தின் மூச்சு கிட்டதட்ட பிரணவ மந்திரம் போன்ற ஒலியுடையது. இதை எல்லாம் குறியீடாக வைத்துத்தான் ஓம் என மந்திரத்தில் லயித்து மனம் தியானத்தில் இருந்தால் அகத்தின் அடியில் இருக்கும் எல்லா தீய குணங்களையும் இறைசக்தி வராகம் பூமியினை கிளறி எடுப்பது போல் எடுக்கும் என உணர்த்த வராஹத்தை தெய்வ உருவமாக்கினார்கள். அந்த இறைசக்தி தியானத்தில் வராஹி என அழைத்தால் அது எதிரியின் மூலவேர் வரை சென்று ஒழித்து நிர்மூலமாக்கி பக்தனை காக்கின்றது. எது மூழ்கிவிட்டதோ, எது புதைந்து விட்டதோ அதை திரும்ப மீட்டு கொடுப்பது வராஹ தெய்வம், விஷ்ணு வராகமாக வந்து பூமியினை மீட்டது அப்படித்தான். வராகர் பூமாதேவியிடம் பேசும் விதமாக அமைந்த 'வராக புராணம்' இந்து மதத்தின் சிறப்புமிக்க 18 புராணங்களுள் ஒன்று. புகழ்மிக்கதாக கொண்டாடபட்ட வராஹி தேவி இந்துக்களில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கின்றாள், அவள் வழிபாடு அவ்வளவு பிரசித்தியானது. அவளை வணங்கினால் தோல்வி வாரா, அவமானங்கள் வாரா, கண்ணீரோ கவலையோ வாரா, அதனாலே அவள் வராஹி எனப்பட்டாள். எங்கெல்லாம் வெற்றி வேண்டுமோ அங்கெல்லாம் அவள் வழிபடபட்டாள், புராணங்களில் இருந்தும் இன்னும் பல இந்துமன்னர்களின் சரித்திரத்திலும் அவள் இடம்பெற்றாள். ராஜராஜ சோழனுக்கு அவள் தனிபெரும் தெய்வம், தோல்வியே பெறாத அவனுக்கு அவளே வழிகாட்டினாள், அவளை அனுதினமும் தொழுத ராஜராஜன் வெற்றிமேல் வெற்றிபெற்றான். தஞ்சை பெரியகோவிலுக்கு அவன் இடம் தேடியபொழுது அவளே வராக உருவில் இடம் காட்டினாள், அவளுக்கு இன்றும் அக்கோவிலில் சன்னதி உண்டு. வராஹ கொடியே தென்னகத்தில் சுல்தான் ஆட்சியினை ஒழித்து இந்து ஆட்சியினை நிறுத்தி பறந்தது. அப்படிபட்ட வராஹியின் சிறப்புக்கள் ஒன்றல்ல இரண்டல்ல, ஏராளம் இந்த ஆனி ஆடிமாதம் ஆறுகளில் புதுவெள்ளம் வரும் காலம், அருவிகளும் ஆறுகளும் பெருக்கெடுக்கும் காலம், நிலத்தை கீறி விதைக்கும் முன் அன்னையினை தொழுதார்கள். காடுகள் செழிக்க வராஹமும் ஒரு காரணம், காட்டினை அது கிளறி கிளறி உழுதுபோடுவதில்தான் அடர்ந்த காடுகள் தொடர்ந்து உருவாயின. அப்படி விவசாயத்துக்கு உழுவதற்கு முன்னும் விரதமிருந்து அன்னையின் அருளை வேண்டினார்கள், பூமியினை கீறபோகும் முன் அவள் அருளுக்காய் மன்றாடினார்கள். அப்படி உருவானதுதான் ஆஷாட நவராத்திரி. அது வெறும் பூமி விளைச்சலுக்கு மட்டுமல்ல, அன்னை மனதிலும் வராஹமாய் வந்து அடிமனதில் இருக்கும் எல்லா துர்குணங்களையும் அகற்றி, வளர வேர் இல்லாமல் அகற்றி ஞானம் தரவேண்டும் என்பதற்காவும் கொண்டாடபடுகின்றது. அந்த ஆஷாட நவராத்திரி கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வேதங்களையும் பூமியினை மீட்ட வராஹம், அரசுரரின் வேர்வரை ஒழித்த வராஹம், இந்து பேரரசின் கொடியாய் எழுந்து இந்து ஆலயங்களை மீட்ட வராஹம் தேசத்தையும் அதன் ஆதாரமான இந்துமதத்தையும் அதன் ஷேத்திரங்களையும் காக்கட்டும். புதைந்து போனதையெல்லாம் அது மீட்டு தரட்டும், தேசம் வாழட்டும், ஒளிரட்டும். மக்கள் மகிழ்வோடு வாழட்டும். - நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !