துவாரகா ஸ்ரீராம் மந்திரில் முதல் புரட்டாசி சனிக்கிழமை பஜனை
புதுடில்லி : புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் பக்தர்கள் நெற்றியில் திருநாமம் அணிந்து, பெருமாளுக்குப் பிடித்தமான சர்க்கரைப் பொங்கல் மற்றும் பிற நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம்.இதன் தொடர்ச்சியாக, புரட்டாசியின் முதல் சனிக்கிழமையை ஒட்டி, துவாரகா ஸ்ரீராம் மந்திரில், ஸ்ரீ ராமகிருஷ்ண பாகவதர், ஸ்ரீ சுனில் பாகவதர் மற்றும் பாலகோகுலம் குழுவினரின் பஜனை, செப்-20ம் தேதி காலை நடைபெற்றது. தோடய மங்களத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளை வரை "ஸ்ரீ ஜெயதேவர் அருளிய" அஷ்டபதிகளை பாடினர்.பிறகு, பஞ்சபதி, பூஜை, அதைத் தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றுடன் பஜனை தொடர்ந்தது. பின்னர் திவ்யநாமம் தொடங்கி, இரவு 8.30 மணிக்கு நிறைவுற்றது.என். எஸ். கிருஷ்ணன் (மிருதங்கம்) , அரவிந்த் பாபு (ஹார்மோனியம்), என். அனந்த கிருஷ்ணன் (டோல்கி)ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.