உள்ளூர் செய்திகள்

நொய்டா நவராத்திரி விழாவில் கமலாம்பா நவாவர்ணம் இசை நிகழ்ச்சி

தேசிய தலைநகர் வலையம் நொய்டா செக்டர் 62-ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் - ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளன்று சண்முகானந்த சங்கீத சபா ஏற்பாட்டில், மயூர்விகார் சுசிலா விசுவநாதன் குழுவினரின் 'கமலாம்பா நவாவர்ணம்' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனர்- தலைவர் கே வி கே பெருமாள் கலந்து கொண்டு இசைக் கலைஞர்களைக் கௌரவித்தார். பின்னர் அவர் பேசுகையில், "சமீபத்தில் இந்திய குழந்தைகள் தொடர்பாக நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், குழந்தைகளுக்கு மன இறுக்கம் அதிகமாகிக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நல்ல அறிகுறி அல்ல. இப்பொழுது வாழ்க்கை முறை மாற்றம் மிக வேகமாக நடந்து வருகிறது. அதுவே குழந்தைகளின் மன இறுக்கத்திற்குக் காரணமாகி விடுகிறது. மன இறுக்கத்திற்கு இசை, நாட்டியம் போன்ற கலைகளைப் போல நல்ல மருந்து கிடையாது. மன இறுக்கத்திலிருந்து விடுபட, குழந்தைகளுக்குப் பாரம்பரிய இசையையும், நாட்டியத்தையும் பயிற்சி அளிக்க வேண்டும். இலக்கியங்களில் ஈடுபாட்டை உண்டாக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் குழந்தைகளைப் பக்குவப்பட்ட மனநிலைக்குக் கொண்டு வர வேண்டியது நம்முடைய தலையாய கடமையாகும்" என்றார். ஆலய நிர்வாக குழுவைச் சார்ந்த கோபால் ஐயங்கார் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார். சண்முகானந்த சங்கீத சபா செயலாளர் கிருஷ்ணசுவாமி இசைக் கலைஞர்களை வாழ்த்திப் பேசினார். விழாவில் நொய்டாவில் வசிக்கும் இசை ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். - தில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !