நொய்டா முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா
நொய்டா செக்டர் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீகார்த்திகேயா கோயிலில், வேத மந்திரம் முழங்க, முதல் நாள் பூஜைகள் கணபதி ஹோமத்துடன், மகா கந்த சஷ்டி விழா தொடங்கியது. கணபதி ஹோமம் விக்னேஷ் மற்றும் கணபதியால் நடத்தப்பட்டது. பக்தர்கள் குழுவாக சௌந்தர்ய லஹரி பாராயணம் நடத்தினர். 3 ம் தேதி காலை, கோவில் நிர்வாகம், 'சத்ரு சம்ஹார ஹோமம்' நடத்த ஏற்பாடு செய்துள்ளது. சத்ரு ஹோமம், என்பது எதிரியை வெற்றி காண்பதற்காக செய்யப்படுவதே சத்ரு சம்ஹார பூஜை என்றால் எதிரியை அழிப்பது அல்ல, 'எதிரியையும் நல்லவனாக மாற்றுவது' என்று பொருள் கொள்ள வேண்டும். எதிரியை அவனது மனமாற்றத்தின் மூலம் வெற்றி காண்பதற்காக செய்யப்படுகின்ற பூஜை என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், மாலையில் திருப்புகழ் அன்பர்ககளின் திருப்புகழ் இசை வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும். நவம்பர் 3 ஆம் தேதி காலை 'முருக கோஷம்', குழு பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பக்தர்கள் தொடர்ந்து 'முருக கோஷம்' பாராயணம் செய்து வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நாட்களிலும் ஸ்ரீ கார்த்திகேயனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் ஸ்ரீ கார்த்திகேய சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்படும். சஷ்டி நாளில், கோவில் வளாகத்திற்குள் காவடி ஊர்வலம் நடத்தப்படும், மற்றும் சஷ்டி நாளில் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறும். 8-ம் தேதி மாலை 'தேவசேனா திருக்கல்யாணம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆறுபடை முருகன் கோவில்களில் செய்வது போலவே அணைத்து பூஜைகளும் நடத்தப்படுகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து பூஜைகளும் பிரம்மஸ்ரீ ஸ்ரீராம் சாஸ்திரிகள், பிரம்மஸ்ரீ சங்கர் சாஸ்திரிகள் ஆகியோரின் மேற்பார்வையோடும் மற்றும் திறமையான வழிகாட்டுதலுடன், மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா ஆகியோரால் செய்யப்படும். 'நொய்டா முருகன் கோயில்', பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தானால் (VPS) நிர்வகிக்கப்படுகிறது. வேதிக் பிரசார் சன்ஸ்தான் (VPS), முப்பத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. 'சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை', என்கிற பழமொழி, நாம் எல்லோரும் அறிவோம். முருகனின் அழகை காண, நொய்டா செக்டர் 62 முருகன் கோவிலுக்கு வரவும். இங்குள்ள முருகனை வணங்கினால் 'வெற்றி' நிச்சயம். கோபுரத்தைக் காண வருவோர்க்கு 'கோடி புண்ணியம்', என்று கோவில் நிர்வாகம் பக்தர்களை, அணைத்து பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்