நொய்டா முருகர் கோவிலில் காவடி / பால்குடம்
நொய்டா, செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் கோவிலில், ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி / பால்குடம் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நொய்டா முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள், 'அரோகரா' கோஷத்துடன் தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்திற்குள் காவடி / பால்குடம் ஊர்வலத்துடன் காலை நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், பன்னீர், பழச்சாறு, விபூதி, சந்தனப்பொடி ஆகியவற்றால் ஸ்ரீ கார்த்திகேயருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு மலர்களால் முருகனை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், மற்றும் ஸ்ரீ கார்த்திகேயரை போற்றும் பாடல்கள் வழங்கினார். மாலையில் திரிசதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்ரீ கார்த்திகேயருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும், மகளிர் பிரிவினர் திருப்புகழ் பாடல்கள் வழங்கினார். அனைத்து பூஜைகளையும் கோவில் வாத்தியார்கள் : ஸ்ரீ மணிகண்டன் சர்மா, மற்றும் ஸ்ரீ மோஹித் மிஸ்ரா ஆகியோர் செய்தனர். மகா தீபாராதனையுடன், முருக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், இந்தச் சந்தர்ப்பத்தில் ஜப்பானைச் சேர்ந்த மிஸ் கானன் கோவிலுக்கு வருகை தந்து, காவடி ஊர்வலத்தை கண்டு ரசித்தார். கோவில் வாத்தியார் மணிகண்டன், இந்த குறிப்பிட்ட நாளில் காவடி எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து அவருக்கு விளக்கினார். நிகழ்வின் சிறப்பம்சமாக, ஒரு மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர் Wg Cdr (ஓய்வு) எஸ் சந்திரசேகர், காவடி எடுத்து ஊர்வலம் முழுவதும் நடனமாடி, முருகனுக்கு ஹரோ ஹரா கோஷமிட்டது எல்லோரும் பார்த்து ரசித்தனர். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்