தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் புறமனை விருந்து-2024 வனபோஜனம்
தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் புறமனை விருந்து-2024 வனபோஜனம் இந்த ஆண்டு 10-11-2024 அன்று காலை சுமார் 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கோலாகலமாக ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவய்யா பூங்காவில் கோலாகலமாக நடைபெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்க மூத்த உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மங்கல விளக்கேற்றினர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு சுவையான இனிப்பு பானகம் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். முதல் நிகழ்ச்சியாக வரவேற்பு பரதநாட்டிய நடனங்கள், சிறுவர் சிறுமியர், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், குழு நடனத்தை தொடர்ந்து குழு புகைப்படம் மற்றும் விழாவின் முக்கிய அம்சமான அறுசுவை விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஐதராபாத்தில் கடத்த 30 வருடங்களாக புகழ்பெற்ற சிற்பியும், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தைச் சேர்ந்த தீவிர இயற்கை விவசாயியும் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான கு.ஜெயராமனுடைய ஏற்பாட்டில் தஞ்சாவூரிலிருந்து கைதேர்ந்த சமையல்காரர்கள் ஐதராபாத் வரவழைக்கப்பட்டு இயற்கை முறை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய நெல் வகைகளான கருப்பு கவுனி அரிசியில் நாட்டு வெல்லத்தில் தயார் செய்த சர்க்கரை பொங்கல், மைசூர் மல்லி அரிசியில் சாதம், பருப்பு பசுநெய், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, கடலை பருப்பு வடை (மசால் வடை) ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நாட்டுச் சர்க்கரை தேங்காய்ப் பால் சேர்த்த பாசி பருப்பு பாயசம், மோர், அப்பளம், கிடாரங்காய் ஊறுகாய் (ராஜ ராஜ சோழன் கிழக்காசிய நாடுகளின் மீது வெற்றிகரமாக படையெடுத்து திரும்பி வந்தபோது கடாரம் என்கிற தற்போதைய மியன்மார் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட காய்...ஆகவே கடாரங்காய் அல்லது கிடாரங்காய் எனப்பட்டது) நாட்டுக் காய்கறிகள் நிறைந்த அவியல் கூட்டு, முட்டைகோஸ் பச்சை பட்டாணி கேரட் பொரியல் இவை அனைத்தும் தலைவாழை இலையில் தமிழ்ச்சங்க நிர்வாக செயற்குழு மற்றும் தன்னார்வர்களின் அன்புடன் கனிவாக பரிமாற அனைவரும் சுவைத்து மகிழ்ந்தனர்.தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார் என்ற பாரதிதாசனின் கூற்றுக்கேற்ப அனைவரும் விருந்துண்டபின் தாம்பூலம் தரித்தனர். வெற்றிலை, பாக்கு போடும் பழக்கத்தை, நம் முன்னோர்கள் அன்றிலிருந்தே கடைப்பிடித்து வந்தார்கள். கும்பகோணம் சீவல் பாக்கு, வாசனை சுண்ணாம்பு வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கலைநிகழ்ச்சிகள் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். சிறப்பான முறையில் உணவு ஏற்பாடு செய்த கு. ஜெயராமனுக்கு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பென்னாடை போர்த்தி நினைவு கேடயம் பரிசளிக்கப்பட்டது. அறுசுவை சுவை உணவு தயாரித்த சமையல் கலைஞர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கினார் அருணா குமாரராஜன். தலைவர் போஸ் அனைவரையும் வரவேற்று பேசினார், துணைத்தலைவர் தர்மசீலன், பொதுச்செயலாளர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் நன்றியுரையாற்றினார். இந்த மாபெரும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக கோலாகலமாக நடைபெற நிர்வாகிகள் நேரு சாஸ்திரி, குமாரராஜன், ஜெகதீசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், செல்வகுமரன், பிரபு விஜயன், ஜெயபிரகாஷ், துரைசாமி, பாலாஜி, ராஜன்முத்துசாமி, மீனாட்சிசுந்தரம், ராஜேந்திரன், வேல்முருகன் மற்றும் தன்னார்வலர்கள் சரவணகுமார், பொன்னுசாமி மற்றும் பெண்கள் குழுவினருடன் இணைந்து பல உறுப்பினர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்து களப்பணியாற்றினர்.