துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் இராம நவமி கொண்டாட்டம்
கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மகா விஷ்ணுவின் முக்கிய அவதாரமான ராமவதாரத்தை சிறப்பிக்கும் வகையில், ராமபிரான் அவதரித்த நவமி தினம், ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ராம பக்தர்கள் விரதம் இருந்தும் பிரார்த்தனை செய்தும் ராமரை வழிபடுகிறார்கள். கோவில்களுக்குச் சென்று ராமாயண நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். ராம நவமியில் ராம நாமத்தை உச்சரிப்பதால், இல்லத்தில் நற்காரியங்களும், செல்வவளமும் வளர்ந்தோங்கும், செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும் என்பது ஐதீகம். அவ்வகையில், துவாரகாவில் அமைந்துள்ள ஸ்ரீராம் மந்திரில் ராமநவமி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை முதலே சிறப்பு பூஜை வழிபாடு, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், ராமாயண ஹோமம், அதைத் தொடர்ந்து சஹஸ்ரநாம ஹோமம் நடைபெற்றன. மேலும் மகளிர் குழு காலை பூஜை மற்றும் ஹோமத்திற்கு பிறகு பிரசாதம் விநியோகித்தது. மாலை ஸ்ரீராம் பரிவார் ஊர்வலம் ராமர் கோவில் வெளி வளாகத்தில் பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பஜனை செய்து வீதி வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு ராமனின் தரிசனம் பெற்றனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்