உள்ளூர் செய்திகள்

டில்லியில் ருக்மணி கல்யாணம் கோலாகலம்

புதுடில்லி; கிழக்கு டில்லியில் உள்ள, சுப சித்தி விநாயகர் கோவிலில் ருக்மணி கல்யாணம் விமர்சையாக நடந்தது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் டில்லியில் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு டில்லி மணி பாகவதர் குழுவினர் ருக்மணி கல்யாணம் சிறப்பாக நடத்தினர். முன்னதாக துவாரகா ராமபத்திரன் சம்பிரதாய உச்ச விருத்தி வைபவத்தை நடத்திட தொடர்ந்து பஜனை பந்ததியில் ருக்மணி கல்யாணம் நடைபெற்றது.மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.சம்பிரதாய முறைப்படி உடை அணிந்து கலாசாரம் மாறாது அனைத்து வைபவங்களை ஆண்களும் பெண்களும் பங்கேற்று நடத்தியது காணவேண்டிய காட்சி. வருடா வருடம் பக்தர்களுக்கு இந்த வைபவத்தை ஏற்பாடு செய்து வரும் கோவில் நிர்வாகத்தை பாராட்டலாம்.ருக்மணி கல்யாணம் கதைகிருஷ்ணர் விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட துவாரகையை அடைந்தார். பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க முடிவு செய்தான்.ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் தெரிவிக்க ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.துவாரகையில் கல்யாணம்பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்து மற்ற அரசர்களை வென்று அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை வருடாவருடம் கோவில்களிலும் மற்ற பிற சத்சங்கங்களிலும் ஏற்பாடு செய்து பக்தர்கள் தெய்வ திருமணத்தை நடத்தி பங்கேற்று மகிழ்வடைகின்றனர்.- நமது செய்தியாளர், மீனா வெங்கி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !