தலைநகர் ரோகிணியில் திருவிளக்கு பூஜை
புதுடில்லி : ஆடி மாதத்தை முன்னிட்டு, ரோகிணி செக்டார் 16-ல் அமைந்துள்ள, மா ஆத்ய சக்தி தாம் மந்திரில், ஸ்ரீவித்யா உபாசகர் எஸ்.கே. மூர்த்தி வாத்தியார் தலைமையில், திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடுகளை, ரோகிணி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சங்கத்தினர் செய்திருந்தார்கள். திருவிளக்கு பூஜை வழிபாடு, இந்து மதத்தில் இடம் பெறும் ஒரு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடாகும்.காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம் நடைபெற்றது.கே.வி. பரசுராம சாஸ்திரிகள் இதனை நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து பூர்ணாஹூதி, ஸ்ரீ ருத்ராபிஷேகம், ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று ருத்ர ஜபம் பாராயணம் செய்தனர். திருவிளக்கு பூஜை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்துடன் தொடங்கியது. உலக நன்மைக்காகவும், பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழவும், போதிய பருவமழை வேண்டியும், ஜம்பதிற்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் இதில் பங்கேற்று தேங்காய், மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஊதுபத்தி, கற்பூரம் எடுத்து வந்து குத்துவிளக்கு ஏற்றி பூஜை வழிபாடு செய்தனர். இதையடுத்து, வடு, கன்யா, தம்பதி பூஜைகள் நடைப்பெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு ராஜேஷ் சாஸ்திரிகள் நடத்தி வைத்த பகவதி சேவையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. திருவிளக்கு வழிபாடுதிருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இந்த வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, அவர் விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய் என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம். விளக்கே தெய்வத்தின் அம்சமாக காலம் காலமாக வழிபடப்பட்டு வருகிறது. பிரதட்சய தெய்வமாக விளங்கும் விளக்கே இருளை அகற்றி ஒளியைத் தரவல்லது. இதனால் திருவிளக்கும் அதன் ஒளியும் முப்பெருந்தேவியரின் அம்சமாக வழிபடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நாம் காணக்கூடியதாய் முதலில் எழுந்தது நெருப்பு. அதற்கு ஸ்பரிசம், நாதம், காட்சி என்ற மூன்று குணங்கள் உள்ளன. நெருப்பின் அடங்கிய அழகிய வடிவமே விளக்கு. உலகின் முதல் விளக்கான சூரியன் பிரதட்சய தெய்வமாக அனைவராலும் தொழப்படுகிறான். சூரியன் மறைவுக்குப் பின்னர் விளக்குகள் தெய்வத்தின் அம்சமாகப் போற்றப்படுகின்றன. விளக்கு ஏற்றி வணங்கினால் தீமைகள் அகலும், நன்மைகள் சூழும். அதேபோல மனதில் உள்ள இருள் அகன்று, எதிர்மறை எண்ணங்கள் விலக தீப வழிபாடு உதவும். அதனாலேயே ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி வழிபடுவது நம் வழக்கம். விசேஷ நாள்களில் விளக்கு பூஜை செய்வதும் பல நன்மைகளை நமக்கு அளிக்கும். வீட்டில் நாம் செய்யும் தீப வழிபாட்டை விட, பல பெண்கள் கூடி சக்தியரின் சத்சங்கமாக, திருக்கோயிலில் செய்யப்படும் திருவிளக்கு பூஜையின் மகிமை பல மடங்கு பலன்களை அளிக்கும் என்கின்றான சாஸ்திரங்கள். அவ்வகையில் திருவிளக்குப் பூஜையில் கலந்துகொள்வதால், சகல தெய்வங்களின் திருவருளையும் நன்மைகளையும் அடையலாம். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்