உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / முடியும் வரை முயன்று பார்க்கும் ஹர்ஷினி

முடியும் வரை முயன்று பார்க்கும் ஹர்ஷினி

பெங்களூரு விஜயநகரை சேர்ந்த தம்பதி ரமேஷ் குமார் - சந்திராவதி. இவர்களின் மகள் ஹர்ஷினி ரமேஷ் குமார், 24. மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு தன் பள்ளி பருவத்தின் போது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என ஆசை உண்டு.இந்த ஆசையை நிறைவேற்ற, பரத நாட்டியம் கற்க துவங்கி உள்ளார். 5ம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பங்கு பெற பயிற்சி பெற்றார். இறுதி நேரத்தில் இவருக்கு சரியாக ஆட தெரியவில்லை என கூறி, அனுமதிக்கவில்லை. அதை நினைத்து மிகவும் வருந்தினார். இதை நினைத்து துாங்காமல் இருந்து உள்ளார். இதையறிந்த, அவரது தந்தை அவருக்கு ஊக்கம் அளித்து உள்ளார்.

விளையாட்டு

'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்பதை உணர்ந்த ஹர்ஷினி, முறைப்படி பரதநாட்டியம் கற்று கொள்வதற்காக பத்மா ஹேமந்த் என்பவரின் வகுப்பில் சேர்ந்தார். ஆர்வமாக கற்றார். இருப்பினும், சிறு பிள்ளைக்கு உண்டான 'விளையாட்டு தனம்' அடிக்கடி வந்து சென்று உள்ளது.அப்போது, வீட்டின் பொருளாதார சூழல் சரியில்லாததால், பயிற்சியை பாதியில் நிறுத்தினார். தன் தந்தை படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்து உள்ளார். விளையாட்டு தனமாக இருந்து விட்டோமே என மனம் வருந்தினார்.மீண்டும் வகுப்பில் சேர மாட்டோமோ என மனதளவில் ஏங்கினார். வீட்டில் அடம் பிடித்து மீண்டும் பரதநாட்டிய வகுப்பில் சேர்ந்தார். இம்முறை, விளையாட்டு தனத்தை கை விட்டு, கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

போட்டிகள்

பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கிடைக்கும் அனைத்து மேடைகளிலும் ஏறி, தன் திறமையை வெளிகாட்ட துவங்கினார். பள்ளி அளவிலான போட்டிகள் மட்டுமின்றி, சென்னை, ஹைதராபாத், கேரளா போன்ற இடங்களில் நடந்த போட்டிகளிலும் பங்கேற்றார். இதில் சில முறை பரிசுகளும், சில முறை அனுபவங்களையும் பெற்று உள்ளார். வெற்றி, தோல்வி பற்றி எல்லாம் கவலைப்படாமல், கிடைக்கக்கூடிய மேடைகளில் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.பள்ளிப்பருவத்தில் கிடைத்த அனுபவங்களை கல்லுாரி பருவத்தில் பயன்படுத்தினார். பி.காம்., படித்து வந்தார். அப்போது, பரதத்தில் முழு கவனத்தை செலுத்தினார். ஆண்டுக்கு ஒரு முறை கல்லுாரிகளுக்கு இடையில் நடக்கும் கலை நிகழ்ச்சி போட்டிகளில் கலந்து கொண்டார். ஒவ்வொரு போட்டியிலும் 20 முதல் 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மூன்று முறையும் முதல் பரிசு பெற்றார்.பள்ளி பருவத்தின் போது குழு நடனம் ஆடி வந்தவர், கல்லுாரி படிப்பின் போது தனியாகவே மேடையில் ஏறி ஆடத்துவங்கி விட்டார். இதை பார்த்த பலரும் அசந்து போய் உள்ளனர். இருப்பினும், 'நாலு விதமாக பேசும் நாலு பேர்' இவரையும் விடவில்லை. 'இதெல்லாம் இவருக்கு தேவையா... பெண்கள் மேடை ஏறுவதா' என கூறி உள்ளனர்.

தடுமாற்றம்

இதை காதில் வாங்காமல், கடந்து சென்று உள்ளார். இதற்கிடையில், 2020ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். கல்லுாரி படிப்பை முடித்ததும், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது, வேலைக்கு செல்வதா... நடனத்தை தொடர்வதா என குழப்பம் அடைந்தார்; முடிவு எடுப்பதில் தடுமாறினார்.என்ன நடந்தாலும், பார்த்துக்கலாம் என நடனத்திலே இறங்க முடிவு செய்தார். 'துணிந்தவனுக்கு தடை ஏது' என்ற நிலையில் வாழ்வின் அடுத்த கட்டத்தில் புகுந்தார். அடுத்த சில மாதங்களில், 2021ல் மஹாதேவபுராவில் உள்ள நியூ கேம்பிரிட்ஜ் பள்ளியில், பரதம் கற்றுத்தரும் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். நடனம் கற்று வந்தவர், முதன் முறையாக மற்றவர்களுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்தார். அப்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி அளித்தார்.இதன்பின், 2022ல் ராஜாஜிநகரில் உள்ள வெங்கட் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், பரதநாட்டிய ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பல மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தார். இதனால் சொந்த வேலைகளை செய்வதில் இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பணியையும் துறந்தார்.

'ஆன்லைன்'

இதன் பின், அத்திகுப்பேவில் உள்ள 'ஷனாக் ஷனா கல்சுரல் இன்ஸ்டிடியூட்'டில், ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். தற்போது அங்கேயே பணியாற்றி வருகிறார். பள்ளி மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறார். ஆன்லைனிலும் கற்று கொடுக்கிறார்.தான் வாழ்வதற்கு தேவையான பணம் சம்பாதித்து வருவதாகவும், மனதிற்கு பிடித்தமான வேலையை செய்வதே முக்கியம் எனவும் கூறுகிறார். பரதநாட்டியத்தில் உள்ள பந்தநல்லுார் பிரிவில் சிறந்து விளங்குகிறார். இதற்கிடையில் இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால், விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். தந்தையின் கனவை நனவாக்க அனுதினமும் கடினமாக உழைத்து வருகிறார்.தன் 15 ஆண்டுகள் பயணத்தில் பல மேடு, பள்ளங்களை கடந்து வந்து உள்ளார். அடுத்த ஆண்டில் பெரிய பரதநாட்டிய பள்ளி துவங்கவும், பரதநாட்டியத்தில் பிஎச்.டி., பட்டம் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் வாழ்ந்து வருகிறார்.இவரை வாழ்த்த, 93792 94970 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி