கண்ணை மூடிக்கொண்டு 14 வயது மாணவி; 24 மணி நேரம் ஓவியம் வரைந்து சாதனை
- நமது நிருபர் -: தட்சிண கன்னடா புத்துாரில் உள்ள ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்த கேசவ் - கீதாமணி தம்பதி மகள் ஷாமிகா, 14. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி அளவிலான ஓவிய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றார். கொரோனா காலத்தில் 2020ல் ஆன்லைன் வழியாக 'மணல் மீது ஓவியம்' வரையும் பயிற்சியில் பங்கேற்றார். இந்த பயிற்சிகளில் கற்றுக்கொண்ட விஷயங்களை, அடிக்கடி வீட்டில் பயிற்சி செய்து பார்த்து வந்தார். பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். 'தான் கற்ற வித்தைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வகையில் போராடுவேன்' என போர்க்குணம் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாக கடந்த வாரம் தனியார் பள்ளியில் நடந்த மணல் மீது ஓவியம் வரையும் போட்டியில் பங்கேற்றார். இதில் சிறப்பு பங்கேற்பாளராக பங்கேற்று, தனி ஒரு சாதனையை நிகழ்த்த முடிவு செய்தார். இதன்படி, சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் அடுத்த நாள் காலை 10:00 மணி வரை 24 மணி நேரம், தொடர்ச்சியாக மணல் மீது ஓவியம் வரைவதாக அறிவித்தார். 24 மணி நேரத்தில், 300 ஓவியங்கள், கண்களை மூடிக்கொண்டு வரைவதாக கூறியிருந்தார். அவர் கூறிய படி, கண்களை மூடிக்கொண்டு ஓவியம் வரைவதை பார்த்து பலரும் மிரண்டனர். இவர் வரைந்த ஓவியங்கள், எல்.இ.டி., திரையில் திரையிடப்பட்டன. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடங்கள் 'பிரேக்' எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்து கொண்டார். இறுதியாக 350 மணல் ஓவியங்கள் வரைந்தார். இதனால், கோல்டன் புக் ஆப் ரிக்கார்ட்டில் இடம் பிடித்தார். இவரை பலரும் பாராட்டினர்.